புதன், 25 ஜனவரி, 2012

ஈழத்தின் சிவன் ஆலயங்கள் பாகம் 05

Posted Image

யாழ்ப்பாணத்தின் மேல்த்திசையில் அமைந்திருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிலேயுள்ள ஊரதீவிலே ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் இலிங்க வடிவிலே அருவுருவமாய் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரப்பெருமான். இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய வரலாறு தெளிவின்றி இருப்பினும் இது ஒரு பழமையான தலமென்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே நிலவிவரும் மரபுவழிக்கதைகள் பிரகாரம், தீவகத்தை பூர்வீகமாகவும் வண்ணார்பண்ணையிலே வசித்து வந்தவருமான மருதப்பு என்பார் 1910ம் ஆண்டு தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் திருப்பதிக்கு சென்று சிவனை வழிபட்டு வந்தார். ஒரு நாள் இராமலிங்கேஸவரப்பெருமான் இவர்கனிவிலே தோன்றி புங்குடுதீவுக்காட்டிலே தன்னை வந்து தரிசிக்குமாறு கூறியருளினார். இவர் உடனேயே புங்குடுதீவிற்கு திரும்பிவந்து நீள்சதுரவடிவில் சிவலிங்கமாய் எழுந்தருளியிருந்த இராமலிங்கேஸவரரை கண்டானந்தித்தார். இந்நிகழ்வு 1911இலே நடைபெற்றதாக கூறுவர். மருதப்புவை ஊரார் மருதப்பு சுவாமியென அழைத்து மகிழ்ந்தனர்.
சிவத்தொண்டராகிய மருதப்பு சுவாமிகள் அந்த ஆண்டிலேயே திருநாவுக்கரசு சுவாமிகளை நினைவுகூர்ந்து சரியைத்தொண்டினைச் செய்யும் வகையில் சித்திரைச் சதயத் தினத்தன்று திருநாவுக்கரசு சுவாமிகளின் குருபூசையை ஆரம்பித்தார். அக்காலகட்டத்தில் அவ்வூரிலே வாழ்ந்த சிவத்தொண்டராகிய மாணிக்கம் என்பார் மருதப்பு சுவாமிகளுக்கு உறுதுணையாய் நின்றார். நன்னீர் பற்றாக்குறையாக இருந்த அவ்விடத்திலே தண்ணீர்ப்பந்தல் அமைத்து சேவையாற்றி வந்தார். இச்சேவையானது அவரது சந்ததியரால் நீண்டகாலம் வரை நடைபெற்று வந்தது. இக்காலப்பகுதியிலே அலயத்தின் முன்னிருந்த காணியை அதன் உரிமையாளர்கள் ஆலயத்திற்கு சாசனம் செய்து கொடுத்தனர்.
மாணிக்கம் அவர்கள், 1930ம் அண்டிலே சிறார்கள் கல்வி கற்பதற்கென ஆலய வளவில் திருநாவுக்கரசு வித்தியாலயத்தையும் ஆரம்பித்து அன்னதான மடத்தையும் அமைத்தார். இராமலிங்கேசுவரரைநாடி மக்கள் வந்து தம் இன்னல் போக்கி சென்றார்கள். ஆலயம் சிறிது சிறிதாக திருப்பணி செய்யப்ட்டு 1948இலே இறைவன் திருவருளால் மகா கும்பாபிடேகம் நடைபெற்றது. கும்பாபிடேகம் அவ்வூர் மக்களை கொண்ட பரிபாலன சபையால் நடாத்தப்பெற்றது. மருதப்பு சுவாமிகள் நல்ல வழிகாட்டியாய் இருந்து வந்தார். தொடர்ச்சியாக ஆலயம் பல திருப்பணிகளை கண்டு 1980ம் வருடம் இரண்டாவது கும்பாபிடேகம் நடைபெற்றது.

Posted Image

தொடர்ச்சியாகவும் பல பெருந்திருப்பணிகள் செய்யப்பட்டு 2002ம் வருடம் பங்குனி மாதம் மூன்றாவது கும்பாபிடேகம் நடைபெற்றது. இவ்வாலயத்தின் முற்பகுதியிலே பூரணை புட்கலை சமேத ஐயனார் ஆலயமும் இருக்கின்றது. இதனால் இவ்வாலயத்தை ஊரார் ஊரதீவு ஐயனார் எனவும் அழைத்தின்புறுவர். இவ்வையனார் ஆலயம் 1850ம் வருடம் அமைக்கப்பட்டதாக அறியப்படுகின்றது.

இவ்வாலயதிற்கு சிறிது தொலைவிலேயே மருதப்புசுவாமிகளின் சமாதிக்கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது.
Posted Image

பர்வதவர்த்தினி சமேதரராக எழுந்தருளி இராமலிங்கேஸவரப்பெருமான் புங்குடுதீவு மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.

Posted Image

புதன், 18 ஜனவரி, 2012

ஈழத்து சிவனாலயங்கள் பாகம் 4

மதுரையம்பதி எனவும், பெருங்காடு சிவன் ஆலயம் எனவும், கிராஞ்சியம்பதி சிவன் ஆலயம் எனவும் அழைக்கப்படும் புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிறீ மீனாட்சியம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்.

யாழ்ப்பாணத்தின் மேலைத்திசையில் அமைந்த சப்ததீவுகளில் பொன்விளங்கு பூமியாக திகழ்வது புங்குடுதீவு. இப்புங்குடுதீவிலே கோவில்கள் நிறைந்து காணப்படும் பிரதேசம் பெருங்காடு எனும் அழகிய கிராமம். இங்கே வாழ்ந்து வந்த சிவப்பிராமணராகிய மார்க்கண்டேய குருக்கள் இப்பெருங்காடு சிவன் ஆலயத்தை தாபிதம் செய்ததாக கூறுவர். இங்கே எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் காசியிலிருந்தும், அருளாட்சி கொடுக்கும் அம்பிகையின் சிலை மதுரையிலிருந்தும் கொண்டு வரப்பட்டவை. ஆலயத்தின் திருப்பணிகள் முடியுமுன்னரே மார்க்கண்டேயக் குருக்கள் கதிர்காமத்திலே இறைவனடி சேர்ந்தார்.
அதன் பின்னர் குருக்களின் மனைவியாரும் அவரின் சகோதரர்களும் சேர்ந்து உர்மக்களின் உதவியோடு பிள்ளையார் கோயில், நவக்கிரக கோயில், வைரவர் கோயில் ஆகியவற்றோடு கூடிய ஆலயத்தின் திருப்பணிவேலைகளை நிறைவு செய்து சிறப்பாக கும்பாபிடேகத்தினையும் செய்தார்கள்.

இரண்டாவது கும்பாபிடேகமும் சிறிது காலத்திலேயே இடம்பெற்றது. இதன்பின் 1977ம் ஆண்டு பஞ்சலிங்க கோயில், மகாவிட்டுணு கோயில் என்பனவும் அமைக்கப்பட்டு மூன்றாவது கும்பாபிடேகமும் சிறப்பாய் நடைபெற்றது. இதன்பின் 1991இலும் பின் 2005இலும் கும்பாபிடேகங்கள் நடைபெற்றன.

இவ்வாலயத்திலே வருடாந்த மகோற்சவம் பங்குனி மாதத்தில் நடைபெறும். இதைவிடவும் சங்கிராந்தி பூசை, பிரதோசம், நால்வர் பூசை, நவராத்திரி பூசை, நடராஜர் அபிசேகம், கேதாரகௌரி நோன்பு, இலட்சார்ச்சனை, மார்கழி திருவாதிரை, ஏகாதசி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
புங்குடுதீவிலே இரண்டு இராச கோபுரங்களுடனம் அமைந்து சிறப்பைக்கொடுப்பதாய் இவ்வாலயம் அமைந்துள்ளது.

வியாழன், 12 ஜனவரி, 2012

பொன்னம்பலவாணேஸ்வரர் என்கின்ற சரித்திரப் புகழ்வாய்ந்த சிவன் கோவில் கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் உள்ளது

.

இக்கோயில் 1856ஆம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த பொன்னம்பலம் முதலியாரால் நிறுவப்பட்டது. பின்னர் அவரது புதல்வர் சேர் பொன் இராமநாதன், பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார். இக்கோயிலின் கட்டிடம் விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டது. இதன் தூண்கள், சிற்பங்கள், கூரைகள் அனைத்தும் கருங்கற்களால் செதுக்கப்பட்டுக் கட்டப்பட்டன. இக்கோயிலின் கட்டிட வேலைகளுக்கு வேண்டிய கற்பாறைகள் சில இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடத்தின் தூண்கள் ஒரே கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டன. கூரை வேய்தலுக்கான கற்பாறைகள் 25 அடி நீளமாகவும், 5 அடி அகலமாகவும், 1 அடி கனமாகவும் உள்ளன.

இக்கோயிலின் இராசகோபுரம் கட்டி முடிக்கப்பட முன்னரே சேர் பொன். இராமநாதன் காலமாகிவிட்டார். அவர் இறந்து பல ஆண்டுகளாகியும் இராசகோபுரம் மொட்டையாகவே இருந்தது. பின்னர் இராசகோபுரத்தை மீள நிர்மாணிக்கும் பணிகள் 1965 ஆம் ஆண்டளவில் அவரது சந்ததியினரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் இராசகோபுரத்தை கருங்கற்களால் அவர்களால் கட்ட முடியவில்லை. பதிலாக சீமெந்தினால் கட்டி முடிக்கப்பட்டது. ஐந்து மாடிகள் கொண்ட இக்கோபுரத்தில் 162 விக்கிரகங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இந்த ராசகோபுரம் வண்னம் தீட்டப்படாது, கருங்கற்களால் செதுக்கிய கட்டிடம் போன்று அமைக்கப்பட்டது.

மூலத்தானத்தில் பொன்னம்பலவாணேசுவரர் வீற்றிருக்க சிவகாமி அம்பாள் - அம்பாள் சந்நிதானத்தில் அமர்ந்திருக்கிறார். நடராசர், மூலப் பிள்ளையார், சோமஸ்கந்தர், பஞ்சலிங்கம், விஷ்ணு, சுப்பிரமணியர், சண்முகர், பைரவர், சுவர்ண பைரவர், நவக்கிரகம் ஆகியோருக்குத் தனித்தனி ஆலயங்கள் உள. கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை முதலானோர் உள்ளனர். சனீசுவரன் தனியாக அமர்ந்துள்ளார்.

வெளிவீதியில் கோவிலின் முன்னே நர்த்தன கணபதியும், தென்புறத்தே மாரி அம்மன், ஆஞ்சநேயர், முனியப்பர் ஆகியோர் தனி ஆலயங் கொண்டுள்ளனர். வடக்கே கோமாதாவின் கோகுலம் உள்ளது.

நித்திய, நைமித்திய பூசைகளும் ஆறு காலப் பூசைகளும் விரதங்களும், அபிடேகங்களும், பொங்கல்களும் குளிர்ச்சி போன்றவையும் சிவாகம முறைப்படி நடைபெற்று வருகின்றன. ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்தாம் நாள் பங்குனி உத்தரத்தன்று நிறைவு பெறும். தேர்த்திருவிழா அன்று சோமாஸ்கந்தர், அம்பாள், சண்டேஸ்வரர் தம் தம் அழகிய சிற்பத் தேர்களிலும் விநாயகர், முருகன் தம் வாகனங்களிலும் எழுந்தருளி வீதி வலம் வருவர். அம்பாளின் தேரைப் பெண்களே இழுப்பது வழக்கம். சுவாமி வெளிவீதி வரும்பொழுதில் நவசந்தித் திருமுறைகள் ஓதப்படுகின்றன. அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சிப் பராயணத்துடன் பூசைகள் ஆரம்பமாகின்றன. காலை 7:00 மணிக்கும் மாலை 7:00 மணிக்கும் நடைபெறும் பூசையில் நித்தியாக்கினி வளர்க்கப்படும்.

ஆடிப்பூரத்தை அந்தமாகக் கொண்டு சிவகாம சௌந்தரி அம்பாளுக்கு லட்சார்ச்சனை, விசேட ஓமம் என்பன நிகழ்ந்து வருகின்றன. நவராத்திரி காலத்தில் விசேட கொலுபூசை, சக்ரபூசை என்பன நடைபெறுகின்றன. நவராத்திரி கால மாலைப் பூசையைத் தொடர்ந்து பொன்னம்பலவாணேசுவர தேவத்தான அறநெறிப் பாடசாலை மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் தினமும் இடம்பெறுகின்றது.


மூலம் விக்கிபீடியா.

செவ்வாய், 3 ஜனவரி, 2012

ஈழத்தின் சிவனாலயங்கள் பாகம் 01

Posted Image


நகுலேஸ்வரம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள , காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்று பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் , நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.

இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும், தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது.

முன்னொரு காலத்தில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராகவிருந்து, பின் கடலரிப்பினால் அழிந்துபோக எஞ்சியுள்ள அடிவாரமே இப்போதுள்ள கீரிமலை என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சிவபெருமானால் சபிக்கப்பட்டு கீரிமுகமடைந்த யமதக்னி முனிவர், இங்கு நீராடி சாப விமோசனத்தைப் பெற்றதாகவும் இதனையடுத்தே இப்பிரதேசம் கீரிமலை என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. நகுலம் என்ற வடசொல் கீரி என்று பெயர் பெறுவதால் இவ்வாலயத்தை நகுலேசுவரம் என்றும் பெயர் பெற்றுள்ளது.

9ம் நூற்றாண்டில் சோழ இளவரசி மாருதப் புரவீகவல்லி குதிரை முகத்துடனும் குன்மநோயுடனும் இருந்து பின்னர் சந்நியாசி ஒருவரால் வழிநடத்தப்பட்டு கீரிமலைச் சாரலில் வந்திறங்கி நகுல முனிவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கீரிமலைத் தலத்தின் விசேடத்தையும் தீர்த்ததின் மகிமையையும் முனிவர் வாயிலாக அறிந்து கொண்டதாகவும், கீரிமலைப் புனித்த தீர்த்தத்தில் நீராடி சிவாலய தரிசனமும் செய்து வந்த மாருதப்புரவீக வல்லியின் குன்ம நோயும் தீர்ந்து குதிரை முகமும் மாறியது என்பது ஐதீகம்.

போத்துக்கீசியரால் இடிக்கப்பட்ட ஆலயம் மூன்று பிரகாரங்களுடன் ஐந்து கோபுரங்களும் உடைய பெரிய ஆலயமாக இருந்தது. கி.பி 1621 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசர் நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், நகுலேசுவரம் ஆகிய ஆலயங்களை இடித்தழித்தனர். அப்போது பரசுரபாணி ஐயரெனும் பிராமணர் கீரிமலைச் சாரலிலுள்ள தேவாலயங்களின் சில பொருட்களையும் விக்கிரகங்களையும் கிணறுகளுள் போட்டு மூடி வைத்தார் என யாழ்ப்பாண வைபவ மாலை குறிப்பிடுகின்றது.

போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட இக்கோவிலை உருவாக்குவதற்கு ஆறுமுக நாவலர் முயற்சி எடுத்தார். 1878 ஆம் ஆண்டுக் காலத்தில் அவரது முயற்சியைத் தொடர்ந்து திருப்பணி வேலைகள் நடந்தேறி, நித்திய, நைமித்திய கிரியைகள் ஒழுங்காக நடைபெற்று வந்தன. 1895 ஆம் ஆண்டு மன்மத ஆண்டு ஆனி மாதம் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்வாலய மகோற்சவம் மாசி மாதத்தில் பதினைந்து நாட்கள் நடைபெறுகின்றது. மாசி மகாசிவராத்திரியில் தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது.


Posted Image



1980களில் ஆரம்பமான உள்நாட்டுப் போரில் சிக்கியிருந்த யாழ்ப்பாணத்தின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் திருத்தலங்களின் நிலைபற்றி வெளிப்படுத்த இத்திருத்தலத்தின் அழிவுகள் காணப்படுகின்றன.

அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் யுத்த காலத்தின் போது பல்வேறு குண்டு வீச்சுக்களையும் தாக்குதல்களையும் எதிர்க்கொண்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் கேதாரகொளரி விரத்தின் போது கோயிலின் மேல் விமானத்திலிருந்து குண்டுகள் வீசப்பட்டன. மூலஸ்தானம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் பெரும் சேதத்திற்குள்ளாயின.


Posted Image


நகுலேசுவரத்தின் வரலாறுகள் தொடர்பில் தட்சிண கைலாசபுராணம், யாழ்ப்பாண வைபவமாலை, சீர்பாதகுலவனாறு, கைலாசமாலை, நகுலேஸ்வர புராணம், நகுலகிரிப்புராணம் என்பனவும் நகுலேஸ்வரர் விநோத விசித்திரக் கவிக்கொத்து, நகுலாம்பிகை குறவஞ்சி, நகுலமலைச் சதகம் என்பனவும் இக்கோயிலின் சிறப்பைக் கூறுகின்றன .
Posted Image