செவ்வாய், 3 ஜனவரி, 2012

ஈழத்தின் சிவனாலயங்கள் பாகம் 01

Posted Image


நகுலேஸ்வரம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள , காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்று பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் , நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.

இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும், தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது.

முன்னொரு காலத்தில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராகவிருந்து, பின் கடலரிப்பினால் அழிந்துபோக எஞ்சியுள்ள அடிவாரமே இப்போதுள்ள கீரிமலை என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சிவபெருமானால் சபிக்கப்பட்டு கீரிமுகமடைந்த யமதக்னி முனிவர், இங்கு நீராடி சாப விமோசனத்தைப் பெற்றதாகவும் இதனையடுத்தே இப்பிரதேசம் கீரிமலை என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. நகுலம் என்ற வடசொல் கீரி என்று பெயர் பெறுவதால் இவ்வாலயத்தை நகுலேசுவரம் என்றும் பெயர் பெற்றுள்ளது.

9ம் நூற்றாண்டில் சோழ இளவரசி மாருதப் புரவீகவல்லி குதிரை முகத்துடனும் குன்மநோயுடனும் இருந்து பின்னர் சந்நியாசி ஒருவரால் வழிநடத்தப்பட்டு கீரிமலைச் சாரலில் வந்திறங்கி நகுல முனிவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கீரிமலைத் தலத்தின் விசேடத்தையும் தீர்த்ததின் மகிமையையும் முனிவர் வாயிலாக அறிந்து கொண்டதாகவும், கீரிமலைப் புனித்த தீர்த்தத்தில் நீராடி சிவாலய தரிசனமும் செய்து வந்த மாருதப்புரவீக வல்லியின் குன்ம நோயும் தீர்ந்து குதிரை முகமும் மாறியது என்பது ஐதீகம்.

போத்துக்கீசியரால் இடிக்கப்பட்ட ஆலயம் மூன்று பிரகாரங்களுடன் ஐந்து கோபுரங்களும் உடைய பெரிய ஆலயமாக இருந்தது. கி.பி 1621 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசர் நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், நகுலேசுவரம் ஆகிய ஆலயங்களை இடித்தழித்தனர். அப்போது பரசுரபாணி ஐயரெனும் பிராமணர் கீரிமலைச் சாரலிலுள்ள தேவாலயங்களின் சில பொருட்களையும் விக்கிரகங்களையும் கிணறுகளுள் போட்டு மூடி வைத்தார் என யாழ்ப்பாண வைபவ மாலை குறிப்பிடுகின்றது.

போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட இக்கோவிலை உருவாக்குவதற்கு ஆறுமுக நாவலர் முயற்சி எடுத்தார். 1878 ஆம் ஆண்டுக் காலத்தில் அவரது முயற்சியைத் தொடர்ந்து திருப்பணி வேலைகள் நடந்தேறி, நித்திய, நைமித்திய கிரியைகள் ஒழுங்காக நடைபெற்று வந்தன. 1895 ஆம் ஆண்டு மன்மத ஆண்டு ஆனி மாதம் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்வாலய மகோற்சவம் மாசி மாதத்தில் பதினைந்து நாட்கள் நடைபெறுகின்றது. மாசி மகாசிவராத்திரியில் தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது.


Posted Image



1980களில் ஆரம்பமான உள்நாட்டுப் போரில் சிக்கியிருந்த யாழ்ப்பாணத்தின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் திருத்தலங்களின் நிலைபற்றி வெளிப்படுத்த இத்திருத்தலத்தின் அழிவுகள் காணப்படுகின்றன.

அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் யுத்த காலத்தின் போது பல்வேறு குண்டு வீச்சுக்களையும் தாக்குதல்களையும் எதிர்க்கொண்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் கேதாரகொளரி விரத்தின் போது கோயிலின் மேல் விமானத்திலிருந்து குண்டுகள் வீசப்பட்டன. மூலஸ்தானம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் பெரும் சேதத்திற்குள்ளாயின.


Posted Image


நகுலேசுவரத்தின் வரலாறுகள் தொடர்பில் தட்சிண கைலாசபுராணம், யாழ்ப்பாண வைபவமாலை, சீர்பாதகுலவனாறு, கைலாசமாலை, நகுலேஸ்வர புராணம், நகுலகிரிப்புராணம் என்பனவும் நகுலேஸ்வரர் விநோத விசித்திரக் கவிக்கொத்து, நகுலாம்பிகை குறவஞ்சி, நகுலமலைச் சதகம் என்பனவும் இக்கோயிலின் சிறப்பைக் கூறுகின்றன .
Posted Image

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக