திங்கள், 18 ஜனவரி, 2010

நாவலரும் ஈழத்தமிழ் இலக்கியமும்

நாவலரும் ஈழத்தமிழ் இலக்கியமும்




ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கெனத் தனிப்பட்ட வரலாறு உண்டென்பதும் அது தனியே ஆராயப்படவேண்டியதென்பதும் இந்நூற்றாண்டின் பிற்பாதியிலேயே அழுத்தம் பெற்றது. தமிழ் இலக்கியம் தமிழ் நாட்டு இலக்கியமாகவே நோக்கப்பட்டு வந்த நிலை மாறி தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈழத்தின் பங்கும் வற்புறுத்தப்பட்டது இதன் பின்னரேயாகும். எனினும் ஈழத்தவர், ஈழத்து இலக்கியம் என்ற பற்றுணர்வு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே ஆரம்பித்துவிட்டது எனலாம். ஈழத்தமிழரின் சமய கலாசார தனித்துவத்தைப் பேணுவதில் முழுமூச்சாக ஈடுபட்ட ஆறுமுகநாவலர் ஈழத்து இலக்கியப் பற்றுக் கொண்டிருந்தவர். 1856-ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட 'நல்லறுவுச் சுடர் கொழுத்தல்' என்ற பிரசுரத்தில் இதனை அவதானிக்கலாம். சி.வை.தாமோதரம்பிள்ளைக் கெதிராகத் தமிழ் நாட்டைச் சேர்ந்த வீராசாமி முதலியார் வெளியிட்ட ஒரு பிரசுரத்தில் ஈழத்தவர் பற்றி இழித்துக் கூறப்பட்டதைக் கண்ணுற்றே 'நல்லறிவுச் சுடர் கொழுத்தலில்' ஈழத்தவர் தமிழ் மொழிக்காற்றிய தொண்டினையும் அவற்றின் முக்கியத்துவத்தினையும் நாவலர் எடுத்துக் கூறியிருந்தார்.

நாவலரின் வாழ்வில்

நாவலரின் வாழ்வில்




முகவை பொன்னுச்சாமித் தேவர் (1837-1870)




திருக்குறள் பரிமேலழகருரை, திருக்கோவையாருரை, சேதுபுராணம் முதலிய இலக்கியங்களும், இலக்கணக் கொத்து, இலக்கண விளக்க சூறாவளி, தருக்க சங்கிரகம் முதலிய இலக்கண தருக்க நூல்களும் ஆறுமுக நாவலரின் ஆய்விலும், பார்வையிலும் அச்சிடப்படிவதற்குரிய ஏற்பாடு செய்தவர் முகவை பொன்னுச்சாமித் தேவர். இந்நூல்கள் ஆறுமுக நாவலரால் பதிக்கப் பெற்று வெளி வந்தபோது, அவற்றைப் பெற விரும்பி, தமிழக முழுவதுமிருந்து புலவர்களும், பயிலும் மாணவர்களும் பாடல்கள் மூலம் பொன்னுச்சாமித் தேவரை வேண்டி எழுதி விண்ணப்பித்தனர். அனைவருக்கும் அஞ்சல்செலவு உட்பட இலவசமாக அனைத்து நூல்களையும் அனுப்பி வைத்தார் தேவர். வேண்டி விண்ணப்பித்த பாடல்கள் யாவும் தொகுக்கப் பெற்று 'பல கவித்திரட்டு' என்ற தலப்பில் உருவாக்கம் செய்து வெளியிடப் பெற்றன.



நாவலர் பெருமானின் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நாள்தோறும் பொன்னுச்சாமித் தேவர் பதிப்பிக்க உள்ள நூல்களை ஒருமுறை பார்த்து, சில திருத்தங்களைச் சொல்வதை வழக்கமாக் கொண்டிருந்தாராம் தேவர். இத்தகைய குறிக்கீட்டை விரும்பாத ஆறுமுக நாவலர் வருந்துவதறிந்த தேவர், சில நாள்கள் நாவலர் பக்கமே செல்வதில்லையாம். தேவர் வருகை தராத காரணத்தைப் புரிந்து கொண்ட நாவலர், தேவரிடம் சென்று "தமிழ் வருகை தராததால் பதிப்புப் பணி வளரவில்லை!" என்றாராம். அதன் பின்னர், நாவலரை நாள்தோறும் சந்திப்பதை நாள்வழிப் பணியாக்கிக் கொண்டாராம் முகவை பொன்னுச்சாமித் தேவர்.



அறிஞர் சொக்கலிங்க ஐயா (1856-1931)



உடுமலைப் பேட்டையில் தந்தையார் தொடங்கிய வணிக நிறுவனத்தில் சிறிது காலம் இளமையில் உதவியாயிருந்த சொக்கலிங்கம், பதினேழு வயதில் யாழ்ப்பணம் வந்தார். யாழ்ப்பாணத்திலும் அவர்களுடைய வணிக நிறுவனம் ஒன்று இருந்தது. யாழ்ப்பாணம் சென்றிருந்த போது ஆறுமுக நாவலரைக் கண்டு தரிசித்துத் தமிழை முறையாகக் கற்கும் தமது வேட்கையைப் பணிவாக நாவலர் பெருமானிடம் தெரிவித்தார் சொக்கலிங்கம்.



நாவலர் பெருமான், "நகரத்தார்களுக்குத் தமிழும், சைவமும் மூச்சும், ரத்தமும் போன்றவை. உணர்வில் ஊறிக்கிடக்கும் அவற்றை உம்மிடம் வளர்க்கச் செய்யும் பணியை, உவந்து ஏற்றுக் கொள்கிறேன்" என்றார் மகிழ்ந்து. யாழ்ப்பாணத்தில் நாவலர் பெருமானிடம், இலக்கிய, இலக்கணத் தமிழ் கற்று, தேவ கோட்டை வன்றொண்டரிடம் திருமுறைகளின் திருநெறித் தமிழ் பயின்று, மதுரை மெய்யப்ப சுவாமிகளிடம் சாத்திரத் தமிழ் படித்து, தமிழின் தகவுணர்ந்தோரானார் சொக்கலிங்கம்.



முத்தமிழின் வித்தகச் சிறப்பை, தத்துவ அமைப்பை, உணர்த்தியும், உணரவும் வைத்த உத்தம அருளாளர் மூவரையும், தமது சித்தத்துள் தெய்வம் அருளிய தேவாசிரியர்களாகக் கொண்டு, அப்பெருமக்களை வணங்கியும், வாழ்த்தியும் திருநூல்கள் இயற்றிப் பெருமகிழ்வு கொண்டார், சொக்கலிங்கம்.



"ஆறுமுக நாவலர் குரு ஸ்துதி", "வன்றொண்டர் குருஸ்துதி", "மெய்யப்ப சுவாமிகள் பதிற்றுப் பத்தாந்தாதி" என்னும் குரு வழிபாட்டு நூல்கள் வெளிவந்தபோது அவற்றின் நுட்பத்திறமும், திட்பத் தரமும் அறிந்த மக்கள், 'சொக்கலிங்கம்' என அழைப்பதை விடுத்து, பணிவோடும் பக்தியோடும், 'ஐயா' என அழைக்கத் தொடங்கினார்கள்.



மூலம்: குன்றக்குடி பெரியபெருமாள்



இராமசாமிப்பிள்ளை



இராமலிங்க அடிகளாரின் திருப்பாடல்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் முதல் நான்கு திருமுறைகளை 1867இல் தொழுவூர் வேலாயுத முதலியார் வெளிக்கொணர்ந்தார். 1869இல் அருட்பா மறுப்பு, "போலி அருட்பா மறுப்பு" இயக்கம் தொடங்கியது. ஆறுமுக நாவலர் இதற்குத் தலைமை தாங்கினார். எதிர்ப்பும் மறுப்புமாக இயக்கம் வளர்ந்தது; தமிழகமெங்கும் இது பரவியது, அறிஞர்களும் பக்தர்களுமாகப் பலர் இரு கட்சிகளாகப் பிரிந்து நின்று வாதிட்டனர்.



சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த அருட்பா மருட்பா இயக்கத்தில் முனைந்து செயல்பட்டவர்களில் ஒருவர் இராமசாமிப்பிள்ளை எனும் தமிழ்ப் பண்டிதர். இவர் இராமநாதபுரத்தில் பிறந்தவர்; மதுரையில் வாழ்ந்தவர்; பத்திரிகாசிரியராகவும் உரையாசிரியராகவும் விளங்கிய இவர் இராமநாதபுர சமஸ்தான வித்துவானாகவும் இருந்தவர்; பொன்னுசாமித்தேவரின் அன்பிற்குப் பாத்திரமானவர்; மதுரைத் திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்து இளைய சந்நிதானத்திற்குக் கல்வியில் உசாத் துணைவராக இருந்தவர்; ஆறுமுக நாவலரிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்; நாவலர் சிதம்பரத்தில் தங்கியிருந்தபோது அவ்வப்போது அங்குச் சென்று அவருடன் இருந்துவரும் பழக்கம் உடையவர். நாவலரை "அண்ணா" என்று அழைக்கும் அளவிற்கு அவரிடம் உரிமையும் நெருக்கமும் கொண்டிருந்தவர் என்பன இங்குக் குறிப்பிடதக்கனவாகும்.



இராமசாமிப்பிள்ளைக்கும் தொழுவூர் வேலாயுத முதலியாருக்குமிடையே அருட்பா பற்றிய வாதம் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் நடந்தது. அதுபற்றி இவர் ஆறுமுக நாவலருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் பம்மல் விசயரங்கனார் (1830-1895) பற்றிய ஓர் குறிப்பும் உள்ளது. "சோமவாரத்திரவிலே ஸ்ரீ விஜயரங்க முதலியாரவர்களும் மடத்துக்கு வந்தார்கள். திருக்கோயிலின் கண்ணே வேலு முதலியிடத்தே பேசினவைகளை வெளியிட்டேன். சந்தோஷப்பட்டார்கள்."

நல்லை நகர் நாவலர்

நல்லை நகர் நாவலர்



- லாவண்ணியா விமலேந்திரன் -




எமது நாடு, கடந்த பல நூற்றாண்டுகளாக அன்னிய ஆதிக்கத்தினாலும், அரசியல் குழப்பங்களினாலும் தன் நிலைமையிழந்து சீர்குலைந்து சிறப்புக் குன்றி நிற்கின்றது. நாடு சிறப்பிழக்கும் போது மக்களின் ஆணிவேர் ஆட்டம் காண்கிறது. அப்போது மக்களுக்கு ஆதரவு நல்க, அவர்களை நல்வழி இட்டுச் செல்ல, நிலையிழந்து நிற்காமல், சீர்குலையாமல் வாழ்க்கை நடத்த அவர்களுக்கு வழிகாட்ட இறைவனால் இவ்வுலகுக்கு அனுப்பப்படுபவர்கள் அவதார புருஷர்கள், பெரியோர்கல், தீர்க்கதரிசிகள், மகான்கள் ஆவார்கள். அவர்களின் தேவைகள் மக்களுக்கு மிகவும் அவசியமாகிறது.

ஈழநாட்டு மக்கள் தம் மதத்தை மறந்து மொழியைப் புறக்கணித்து, தேசியப்பற்றைத் துறந்திருந்த காலத்தில் நல்ல ஊராகிய நல்லூரில் 18-12-1822ஆம் ஆண்டு அவதரித்த உத்தம புருஷர் எங்கள் நாவலர், தலைசிறந்தவரென்றால் அது புகழ்ச்சிப் பேச்சல்ல.



அன்று அன்னிய ஆதிக்கம் நம் நாட்டில் வேரூன்றத் தொடங்கியபோது மக்கள் விரும்பாமலே மேலைத் தேச நாகரிகங்கள் திணிக்கப்பட்டன. வியாபாரம் செய்யவென்று கூறி வந்தவர்கள் கலை, கலாச்சாரம், தேசியப்பற்று அனைத்தையும் அகற்றி வந்தனர். மேல் நாட்டிலிருந்து வந்த அனைத்தையும் ஆராயாமல் கைகொட்டி நம்மவரும் வரவேற்றனர். மேல்நாட்டு மோகம் ஏற ஏற தாய்நாட்டுப் பற்று சீர்குலைந்து தமிழ்மொழிமீது வெறுப்பு ஏற்பட்டது. சைவமும் தமிழும் அழிந்து விடுமோ என்று அஞ்சியவேளை, தம் நிலை மறந்து பரிதவித்டு நின்ற இந்நாட்டு மக்களைத் தலைதூக்க அந்தக் காலத்தில் வந்தவரே எங்கள் நாவலர். அஞ்சிக் கொண்டிருந்த காலத்தில் அவதரித்ததனால் போலும் ஆறுமுகம் எனப் பெயரிட்டனர் பெற்றோர். அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றாதா?



விளையும் பயிரை முளையிலேயே தெரியும். மிகச் சிறுவயதிலேயே பெரிய பல நூல்களையெல்லாம் மகாவித்துவான் சேனாதிராசா, சரவணமுத்துப் புலவர் முதலியோரிடம் கற்றுத் தெளிந்த எங்கள் ஆறுமுக நாவலர், பீற்றர் பேர்சிவல் பாதிரியார் பாடசாலையில் ஆங்கிலம் கற்றார். இப்பாடசாலைதான் இக்காலத்து யாழ்ப்பாண மத்திய கல்லூரி எனச் சொல்கிறார்கள். இவரது 9 ஆம் வயதிலே தந்தையார் விட்டுச் சென்ற பாடலைப் பூர்த்தி செய்தாரென்றால் அன்னாரின் விவேகம்தான் என்னே!



ஆங்கில அறிவைச் சொல்லிக் கொடுத்த பேர்சிவல் பாதிரியார் இவரின் கல்வி அறிவைக் கண்டு வியந்து போனார். இவரின் அறிவின் அபாரசக்தியைக் கண்டு மெச்சினார். அதுமட்டுமா? எங்கள் நாவலரிடமே தமிழ் கற்க வேண்டும் என ஆசைப்பட்டார். வெள்ளைக்கார பாதிரிக்கு - தன் குருவுக்கு - தமிழ் மொழி கற்பிக்கும் ஆசான் ஆகினார் என்றால் அவரின் ஆற்றலை என்னென்று சொல்வது? அவரின் கல்வித் திறனைக் கண்ட பாதிரி தமது பாடசாலையில் நாவலரை ஆசிரியராக அமர்த்திக் கொண்டார். அதுமட்டுமல்ல. விவிலிய நூலைத் தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பையும் நாவலரிடம் ஒப்படைத்தார். முதன்முதலில் விவிலிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எங்கள் நாவலர்தான் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.



நாவலர் மதப்பற்று கொண்டவர். ஆனால் ஏனைய மதங்களிடம் குறை காணவில்லை. ஒரு மதத்தை நிந்தனை செய்து மற்ற மதத்தை வளர்ப்போரை மட்டும் காரணம் காட்டி குற்றம் சுமத்தினார். மதமாற்றத்தை வன்மையாகக் கண்டித்தார். அதற்குத் தூண்டுகோலாக இருந்தவர்களைத் தனது சொல்லமுகளால் சவுக்கடி கொடுக்க மறக்கவில்லை. மதமாற்றத்தை வெறுத்தாரே தவிர - மதங்களை அவர் வெறுக்கவில்லை. இந்து மதம் போலவே ஏனைய மதங்களையும் மதித்தார். விவிலிய நூல் மொழிபெயர்ப்பே இதற்கு உதாரணமாகும். தன் கடன் பணி செய்வதே எனத் தொண்டாற்றியவர் நாவலர் என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அவராற்றிய அரும்பெரும் சேவைகளையெல்லாம் நாவலர் காலக் கண்ணாடி போட்டுப் பார்த்தால் தான் நமக்குப் புரியும். தான் பிறந்த மதம், தாய்மொழி, தேசியத் தொண்டு அனைத்துக்கும் தன்னைத் தியாகம் செய்த அவதார புருஷர் நம்நாட்டில் இருந்தார் என்றால் அது நிச்சயம் நாவலர்தான்.



பாடசாலையில் ஆசிரியராக இருந்தபோதும் மதத்தின் பேரால் நாடும் மொழியும் சுரண்டப்படுவதைக் கண்டு கொதித்தவர் நாவலர். நாடும் மொழியும் எக்கேடும் கெடட்டும். நாங்கள் சம்பளத்துக்கே வேலை செய்வோம் என எண்ணும் இக்காலத்தவர்க்கு அக்கால நாவலர் சரித்திரம் ஒரு நல்ல பாடம்தான்.



தேசியப் பாடசாலைகள் நிறுவுவது, பத்திரிகைகள் நடத்த அடிகோலுவது, இனிய தமிழ் நூல்களை வெளியிடுவது, செய்யுள் நூல்களை வசன நூலாக்குவது, பிரசங்கம் செய்வது எனப் பல பணிகளைத் தாமே மேற்கொண்டார். தாமெ அரும்பாடுபட்டு நைட்டிகப் பிரமச்சாரி விரதம் பூண்டு பெரும் பணியாற்ற முயற்சித்தார். யாழ்ப்பாணத்திலும், சென்னையிலும் அச்சகங்களை நிறுவி நூல்கள் பல வெளியிட்டார். தமிழ் வசன நடையில் ஒரு மறுமலர்ச்சியை உண்டு பண்ணியதால் அறிஞர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் 'வசன நடை கைவந்த வள்ளலார்' எனப் பாராட்டப்பட்டார். சைவப் பிள்ளைகள் சைவப் பாடசாலைகளிலே படிக்க வேண்டும் என்ற விருப்புக்கொண்டு செயலாற்றியவர். யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்திலும் இரு கலாசாலைகளை நிறுவினார். நாவலரின் பாலபாடங்களுக்கும், வசன நடைக்கும் ஒரு தனி மதிப்பு இன்றும் இருக்கிறது. என்றும் இருக்கும்!



எமது சைவ ஆலயங்கள் சீர்பெற அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் எனத் துணிவுடன் கூறி உழைத்தார். கேதீஸ்வரமும், கோணேஸ்வரமும் எமது தேசியச் சொத்து என எடுத்தியம்பியவர் ஆறுமுகநாவலர். ஆங்கிலப் புலமை பெற்றிருந்தும், தமிழில் தன் பணிகளைத் திரிகரண சுத்தியோடு செய்தவர் நாவலர். இவர் ஆங்கில மொழியில் பணியாற்றியிருந்தால் ஆங்கில உலகமும் இவரைப் போற்றியிருக்கும். தமிழ் மீதிருந்த பற்றினால் - சைவத்துக்கும் தமிழுக்குமாகவே வாழ்ந்தார்.



இலங்கைச் சுதந்திரத்துக்கு வித்திட்ட அரசியல்வாதிகளில் முதலிடத்தை வகிக்கும் இராமநாத வள்ளலுக்குச் சட்டசபை செல்ல ஆதரவளித்து மேடை மேடையாகப் பேசியவர் நாவலர். இதன் மூலம் நாட்டின் சுதந்திரத்துக்கு அடிகோலியவர்களுள் நாவலரும் ஒருவரென்றால் வெறும் பேச்சல்ல. சேர் இராமநாதன் சட்டசபையில் என்ன கூறினார் தெரியுமா? "The Champion Reformer of Hindus Arumuganavalar" (வீறுகொண்டு வெற்றிக்கொடி நாட்டிய இந்து சீர்திருத்தக்காரர் ஆறுமுகநாவலர்). என்னே இப்பெரியாரின் தீர்க்கதரிசனமும் சொல்லும் செயலும்!



ஒருமுறை வழக்கொன்றில் சாட்சியமளிக்க நாவலர் அழைக்கப்பட்டார். நீதிபதி வெள்ளைக்காரர் என அறிந்து ஆங்கிலத்தில் பேசினார். வெண்ணீறு அணிந்தவரிடம் ஆங்கிலம் தங்கு தடையின்றி வந்ததைக்கண்ட நீதிபதி பொறாமைப்பட்டுக் கொதித்தார். தமிழில் பேசு என்றார். நாவலர் நல்ல செய்யுள் ரூபமாக தூய தமிழில் சாட்சி சொன்னார். மொழிபெயர்ப்பாளரால் மொழிபெயர்க்க முடியவில்லை. தடுமாறினார். நீதிபதி வெட்கித் தலைகுனிந்தார்.



நாவலரின் சேவைகளையும், நாவன்மையையும் கண்டு திருவாவடுதுறை ஆதீனம் நாவலர் என்னும் பொருத்தமான பட்டப்பெயர் கொடுத்து கௌரவித்து மகிழ்ந்தது. நாவலரின் வாழ்க்கை எப்போதும் சேவை, சேவை என்றே சென்றது. என் கடன் பணி செய்து கிடப்பதே. நாமார்க்கும் குடியெல்லோம் என முழங்கிய நாவுக்கரசர் வழிவந்தவரல்லவா?



இறுதியாக எங்கள் நாவலர் ஒரு சீர்திருத்தவாதி பெரும் அறிஞர். அறிவுக் களஞ்சியம், ஆண்மையின் பொக்கிஷம், அன்னியரின் அட்டூழியங்களை அடக்க வந்த அவதார புருஷர். சித்தாந்தச் சொற்கண்ட பிரசங்க பேரறிஞர். நூல்கள் பதிப்பதில் திறமை கண்டவர். தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் திறவுகோல். தீர்க்கதரிசனத்துடன் தொண்டாற்றிய தீரர்.



நாவலர் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால்...



பல அரிய சேவைகளைச் செய்திருப்பார். நாவலர் வாழ்க்கை வரலாறு வெரும் கட்டுக் கதையல்ல. நமது யாழ்ப்பணத்தில் தோன்றிய ஒரு பெருமகனாரின் உண்மைச்சரித்திரம். இன்று கலங்கி நிற்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் நாவலர் வாழ்க்கை தன்மானமுடன் வாழ வழிகாட்ட வேண்டும்.



"நல்லை நகர் ஆறுமுகநாவலர் பிறந்தில ரேற்



சொல்லு தமிழெங்கே"

ஆறுமுகநாவலரின் பிரசங்க வழி

ஆறுமுகநாவலரின் பிரசங்க வழி




தமிழிலே பிரசங்க மரபை முதன் முதலாக ஆரம்பித்து வைத்தவர் ஆறுமுகநாவலர் அவர்களே என்பதைச் "சைவமென்னுஞ் செஞ்சாலி வளரும் பொருட்டுப் பிரசங்கம் என்னும் மழையை முதன் முதற் பொழிந்தார்" என்று த. கைலாசபிள்ளை கூறுவது கருதற்பாலது.

சைவ ஆகமங்கள் பற்றியும், சமயகுரவர் பற்றியும் பிரசங்கங்கள் செய்து மக்களுக்குச் சமய உண்மைகளை எடுத்து விளக்கியவர் நாவலர். 1846 ஆம் ஆண்டு தனது வீட்டுத் திண்ணையில் மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்ல்க் கொடுக்க ஆரம்பித்த நாவலர், பின்னர் பொதுமக்கள் நன்மையின் பொருட்டு 1847ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31ஆம் திகதி வண்ணார்பண்ணைச் சிவன்கோவிலிலே சைவப்பிரசங்கத்தை ஆரம்பித்தார். இப்பிரசங்க மரபானது அவரது இறுதிக்காலம் வரை நடத்தப்பட்டது.

நாவலரின் பிரசங்கங்களின் பயனாகப் பலர் சிவதீட்சை பெற்றனர்; மாமிச போசனத்தைத் தவிர்த்தனர்; கோவிலுக்கு ஒழுங்காகச் சென்று வழிபட்டு வரத் தொடங்கினர். சைவாசிரம தர்மங்களைக் கடைப்பிடித் தொழுகவும் தலைப்பட்டனர். இங்ஙனம் நாவலர் தமது சமயப் பிரசாரப் பணியைக் கிராமங்களிலும் மேற்கொள்ளத் தொடங்கினார்.

நமது சமயத்தின் மீது கிறிஸ்தவர்கள் நடத்தி வந்த தாக்குதல்களை எல்லாம் புறங் காணும் நோக்கத்தோடு நாவலர், 'சுப்பிரபோதம்', 'சைவ தூஷண பரிகாரம்' என்னும் நூல்கள் இரண்டை எழுதி வெளியிட்டார்.

"தாம் கொண்ட கொள்கையை நிறுவத் தமது சமய உண்மைகளைப் பாதுகாப்பதற்காக எடுத்தாண்ட நூல்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாயிருக்கிறது. எந்தெந்த வகையிலெல்லாம் எதிர்ப்பும் மறுப்பும் தோன்றக்கூடுமோ அவற்றையெல்லாம் எதிர்பார்த்து அவற்றுக் கெல்லாம் தர்க்க ரீதியான பதில் கூறி விளக்கியிருக்கும் சாதுரியத்தை உண்மையிலேயே முதல் தரமான நுண்ணறிவு படைத்த ஒருவரிடத்திலே தான் காண முடியும். இந்நூல் நமக்குப் பெருந் தீங்கையன்றோ விளைவிக்கின்றது?"

இவ்வாறாக 1855 ஆம் ஆண்டில் இங்கிலாந்திலே அச்சிடப்பட்ட வெஸ்லியன் மெதடிஸ்த அறிக்கையிலே சைவதூஷண பரிகாரம் என்ற நாவலருடைய நூலைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

சைவசமயத்தின் அடிப்படை அறிவைப் பெறாதவர்களே புராணங்களை விமர்சிக்கப் புறப்பட்டு, சிவனும், சுப்பிரமணியரும் தத்தமது சக்திகளை உண்மையாகவே திருமணம் புரிந்ததாகக் கூறி வருகிறார்கள். "சுவரூபி, எங்கும் நிறைந்தவர் என்பதையும் 'கடவுள் திருமணம் புரிந்தார்' என்பது அபத்தம், என்பதையும் ஓரளவு சமய அறிவு படைத்தவர் எவரும் அறிவர்." என்று நாவலர் தமது சுப்பிரபோதத்திலே கூறியுள்ளார். கோவில்களிலே தாசியர் நடனங்களை நடத்தும் துராக்கிருதமான செயல்களைத் தவிர்த்து அதற்குப் பதிலாக, தேவாரப் பண்களை இசைத்தல், சமயப் பிரசங்கங்களைச் செய்வித்தல் போன்ற நல்ல காரியங்களைச் செய்விக்குமாறு கோவில் அதிகாரிகளுக்கும் அந்நாளிலே நாவலர் அறிவுரை வழங்கினார்.

நாவலரின் சைவப்பிரசங்கக்களுக்குக் கிறிஸ்தவ தேவாலயங்களிலே நடக்கும் பிரசங்கங்கள் வழிகாட்டியாக அமைந்தன. கிறிஸ்தவர்களது வேகமான பிரசாரத்தால் மக்கள் மதிமயங்கி உண்மை அறியாது தவித்த நேரத்தில் இவர்களில் அக்கறை உடையவர்களாக சைவக்குருக்கள் விளங்கினார்கள் இல்லை. மதமாற்றத்தைக் கண்டும், அதைத் தடுக்க ஆவா செய்யாத சைவக் குருக்கள் மீதும், சைவசமயத்தைத் துறந்து சொந்த லாபம் பெறும் நோக்குடன் மதம் மாறினோர் மீதும் நாவலர் சொல்லம்புகள் துளைக்கத் தவறவில்லை. சைவசமயிகளை நோக்கி அவர் கூறிய அறிவுரைகளைப் பார்க்கும்போது நாவலர் நெஞ்சம் வருந்தி வேதனைப்பட்டது புலனாகின்றது.

"யாழ்ப்பாணத்திலுள்ள சைவசமயிகளே! உங்களிடத்துள்ள அன்புமிகுதியினாலே நாஞ்சொல்பவைகளைக் கேளுங்கள். நீங்கள் சிவதீட்சை பெறும் என்னை! விபூதி ருத்திராக்ஷ¡தாரணம், பஞ்சாக்ஷரசெபம், சிவாலய தரிசனம், இவைகளை நியமமாகச் செய்தும் என்னை! உங்கள் சமயக் கடவுளாகிய சிவபெருமானுடைய இலக்கணங்களையும் புண்ணிய பாவங்களையும், அவைகளின் பயன்களாகிய சுவர்க்க நரகங்களையும், சிவபெருமானை வழிபடும் முறைமையையும், அதனாலே பெறப்படும் முக்தியின் இலக்கணங்களையும், கிரமமாகப் படித்தாயினும், கேட்டாயினும் அறிகின்றீர்களில்லை. உங்கள் பிள்ளைகளுக்கு இவைகளைப் படிப்பிக்கின்றீர்களில்லை. உங்கள் கோயில்களிலே சிவபக்தியை வளர்ப்பதற்கு ஏதுவாகிய வேதாபாராயாணம், தேவார திருவாசக பாராயாணம், சைவசமயப் பிரசங்கம் முதலிய நற்கருமங்களைச் செய்விக்கின்றீர்களில்லை."

என உள்ளம் நொந்து நாவலர் சைவசமயிகளுக்கு விடுத்த விண்ணப்பத்தில் 'உங்களிடத்திலுள்ள அன்பு மிகுதியினாலே நாஞ் சொல்பவைகளைக் கேளுங்கள்' என்ற அவர் கூற்று சமுதாயத்தின் அக்கால நிலைமையை வெளிப்படுத்துகின்றது. சைவ சமயத்தவர்களின் நலன் கருதி உழைக்காத சைவக்குருக்கள் போக்கும் நாவலரை வேதனைக்குள்ளாக்கியது. இவை யாவற்றுக்கும் பரிகாரமாகவே பிரசங்க மரபை அவர் தொடக்கினார். நாவலரோடு ஒருகாலை மாணாக்கராயிருந்த கார்த்திகேய ஐயரும் இடையிடையே பிரசங்கம் செய்து வந்தார்.



தான் மட்டும் பிரசங்கங்கள் செய்து மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கம் கொண்டவராக விளங்காது சைவப்பிரசங்கங்கள் செய்ய வல்லரவர்களுக்குத் தேர்ச்சி கொடுத்து இத்தொண்டிற் பலரை ஊக்குவிக்கவும் முயன்றிருக்கின்றார்.

தமிழ்க்கல்வியும், சைவசமயமும் அபிவிருத்தியாவதற்குக் கருவிகள் முக்கிய ஸ்தலந்தோறும் வித்தியாசாலை ஸ்தாபித்தலும், சைவப்பிரசாரணஞ் செய்வித்தலுமேயாம். இவற்றின் பொருட்டுக் கிரமமாகக் கற்றுவல்ல உபாத்தியாயர்களும் சைவப்பிரசாரகர்களும் வேண்டப்படுவார்கள். ஆதலினாலே நல்லொழுக்கமும், விவேகமும், கல்வியில் விருப்பமும், இடையறாமுயற்சியும், ஆரோக்கியமும் உடையவர்களாய்ப் பரீக்ஷிக்கப்பட்ட பிள்ளைகள் பலரைச் சேர்த்து அன்னம், வஸ்திரம் முதலியவை கொடுத்து உயர்வாகிய இலக்கண விலக்கியங்களையும், சைவசாஸ்திரங்களையுங் கற்பித்தல் வேண்டும். அவர்களுள்ளே தேர்ச்சியடைந்தவர்களையே உபாத்தியாயர்களாகவும் சைவப்பிரசாரகர்ளாகவும் நியமிக்கலாம்."
மேற்குறிப்பிட்ட ஆறுமுகநாவலர் கூற்றிலிருந்து தமிழ், சைவம் என்ற இரண்டினையும் அபிவிருத்தி செய்வதற்காக இளஞ்சந்ததியினரை ஊக்குவிப்பதற்கு நாவலர் ஒரு திட்டத்தினையே மனதிற் கொண்டிருந்தார் என்பது தெளிவாகின்றது.

நன்றி: சைவநீதி


நாவலரின் கடைசிப் பிரசங்கம்

நாவலர் பிரசங்கங்களையும் புராண படலங்களையும் இருந்து கொண்டு செய்வார். ஏனைய சமூக, பொருளாதார விடயங்கள் பற்றிப் பிரசங்கங்கள் செய்யும் போது நின்றுகொண்டு செய்வார். பிரசங்கம் செய்யும்போது தரித்திருக்கும் பட்டாடையும் திரிபுண்டரமும் கௌரிசங்கமும் தாழ்வடமும் எவரையும் வசீகரிக்கும். இவரது இனிமையான குரல் வெகுதூரம் கேட்கும். எல்லா வகையான இராகங்களும் நாவலருக்கு வரும். சிலசமயம் நான்கு மணி நேரம் வரையும் காலெடுத்து மாறி வையாமலும் உடலுறுப்புக்களை அசைக்காமலும் ஒரே மாதிரியிருந்து கொண்டு பிரசங்கிப்பார்.

நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசை தினமான ஆடிச்சுவாதியன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் நடைபெற்றது. அன்று பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை என்ற சுந்தரரின் தேவாரத்தைப் பீடிகையாக வைத்துப் பிரசங்கித்தார்.

நிலையில்லாத இந்தச் சரீரம் உள்ள பொழுதே எனது கருத்துக்கள் நிறைவேறுமோ என்னும் கவலை இராப்பகலாக என்னை வருத்துகிறது. அதாவது சைவமும் தமிழும் வளர்ச்சியடைவதற்கு வித்தியாசாலைகளைத் தோற்றுவித்தலும், சைவப் பிரசங்கத்தைச் செய்வித்தலும் இன்றியமையாதனவாகும். நான் உங்களிடத்துக் கைமாறு கருதாமல் முப்பத்திரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பணியும் சைவப் பணியும் செய்துள்ளேன்.எனக்குப் பின் சைவ சமயம் குன்றிப்போகும் எனப் பாதிரிமார்கள் சொல்லுகிறார்கள். எனவே உங்களுக்காக சைவப் பிரசாரகரைத் தேடிக்கொள்ளுங்கள். இதுவே என்னுடைய கடைசிப் பிரசங்கம், இனிமேல் நான் உங்களுக்குப் பிரசங்கம் பண்ணமாட்டேன் என்ற கருத்துப்பட பேசினார். அப்பிரசங்கத்திற்கு வந்தவர்களில் கண்ணீர் விட்டழாதவர் எவருமில்லை.

மறுநாள், நேற்றிரவு ஏன் இவ்வாறு பிரசங்கம் செய்தீர்கள்? என்று அன்பரொருவர் கேட்டபோது தமக்கு அந்நேரம் ஒன்றும் தெரியவில்லை என்றாராம் நாவலர்.

நாவலரது கூற்றுப்படியே அப்பிரசங்கம் அவரது கடைசிப் பிரசங்கமாக அமைந்தது. இப்பிரசங்கம் நடைபெற்று நான்கு மாதங்களின் பின் அவர் சிவபதமடைந்தார்.

ஆறுமுகநாவலரும் சிதம்பரமும்



ஆறுமுகநாவலரும் சிதம்பரமும்


-ச. அம்பிகைபாகன்-



"சிதம்பரம் போகாமல் இருப்பேனோ

சென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ"


என்று கோபாலகிருஷ்ண பாரதியார் பாடி இருப்பது, நந்தனாருக்குச் சிதம்பர தரிசனத்தில் இருந்த ஆர்வத்தை மாத்திரமில்லாமல், சைவர்களாயுள்ளோர் எல்லோரினதும் ஆர்வத்தையும் பிரதிபலிக்கிறது. சைவர்களாய் உள்ளவர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சிதம்பரத்தைத் தரிசிக்காதுவிட்டாற் பிறவிப் பயனை அடையாதவர்களாகத் தம்மைக் கருதுவர். இப்படி இவர்கள் கருதுவதற்குக் காரணம் சிதம்பரத்தின் ஒப்பற்ற மகிமையே. ஆறுமுக நாவலரவர்கள் சிதம்பரத்தின் மகிமையைப் பெரியபுராணம் தில்லைவாழந்தணர் புராணத்துக்கு எழுதிய சூசனத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்.



சிதம்பரத்தின் மகிமை



"சாந்தோக்கிய உபநிடததிலே பிரமபுரத்திலுள்ள நகரமாகிய புண்டரிக வீட்டினுள்ளே இருக்கும் ஆகாச மத்தியில் விளங்கும் அதிசூக்கும சித்தை அறிதல் வேண்டுமென்று தகரவித்தை சொல்லப்பட்டது. இங்கே பிரமபுரமென்றது இச்சரீரத்தையும், புண்டரிக வீடென்பது இருதயகமலத்தையும், ஆகாசமென்றது பராசக்தியையும், அதிசூக்குமசித்தென்றது பரப்பிரம்மமாகிய சிவத்தையும் என்றறிக. புறத்தும் இப்படியே இப்பிரமாண்டம் பிரமபுரமெனவும், இப்பிரமாண்டத்தினுள்ளே இருக்குந் தில்லைவனம் புண்டரிக வீடெனவும், தில்லைவனத்திலிருக்கும் ஆகாசம் பராசக்தியாகிய திருச்சிற்றம்பலம் எனவும், அத்திருச்சிற்றம்பலத்திலே நிருத்தஞ் செய்யும் பரப்பிரம்மசிவம் அதிசூக்குமசித்தெனவும் சொல்லப்படும். இவ்வாகாசம் பூதாகாசம் போற் சடமாகாது சித்தேயாம்; ஆதலால் சிதம்பரமெனப்படும். இச்சிதம்பரம் எந்நாளும் நீக்கமின்றி விளக்குந்தானமாதலால், தில்லைவனமும் சிதம்பரம் எனப் பெயர்பெறும்."



தில்லைவாழ் அந்தணர் பெருமை



மேலே குறிப்பிடப்பட்ட அதே சூசனத்தில் கூத்தப்பெருமானைப் பூசிக்கும் அந்தணர் பெருமையையும் விளக்கியுள்ளார். அதன் சாரம் பின்வருமாறு: ஒருமுறை பிரமா, தாம் புரியும் யாகத்துக்கு உதவிசெய்யும் பொருட்டு வியாக்கிரபாதமுனிவரின் அனுமதியோடு தில்லை மூவாயிரவரைக் கங்கை நதிதீரத்துக்கு அழைத்துச் சென்றார். உரியகாலத்தில் அவர்கள் திரும்பி வராதபடியால், வியாக்கிரபாத முனிவர் இரணியவன்ம சக்கரவர்த்தியை அழைத்துவரும்படி அனுப்பினார். அப்படி அழைத்து வந்து தில்லை மூவாயிரவரை எண்ணியபொழுது ஒருவர் குறைவதைக்கண்டு சக்கரவர்த்தி திகைத்தார். அப்பொழுது சிவபெருமான் தேவர் முதலிய யாவரும் கேட்ப பின்வருமாறு கூறினார். "இவ்விருடிகள் எல்லோரும் எமக்கு ஒப்பாவார்கள். நாமும் இவ்விருடிகளுக்கு ஒப்பாவோம்; ஆதலால் நம்மை இவர்களுள் ஒருவராகக் கைக்கொள்".



மேற்கூறியவாறு சிதம்பரத்தின் மகிமையை உணர்ந்தே நாவலரவர்கள் அதியே கேந்திரமாக வைத்து சைவத்தை வளர்க்க ஒரு மாபெருந் திட்டம் வகுத்தார்.



நாவலர் கல்விப்பணி



சிதம்பரத்திற்குச் செல்லுமுன் நாவலர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணை, கந்தர் மடம், கோப்பாய், பருத்தித்துறை முதலிய இடங்களில் சைவப் பிரகாச வித்தியாசாலைகளைத் தாபித்தார். ஆனால் சிதம்பரத்தில் நாவலர் அவர்கள் ஒரு சாதாரண வித்தியாசாலையைத் தாபிக்கத் திட்டம் போடவில்லை. அவர்கள் போட்ட திட்டம் சைவப்பிரசாரர்களைப் பயிற்றும் ஒரு தாபனத்திற்கே. இத்தாபனம் கத்தோலிக்கரின் செமினறிகளையும் புரட்டஸ்தந்தரின் மதச்சாத்திரக் கல்லூரிகளையும் போன்றதாகும்.



நாவலர் அவர்கள் சிதம்பரத்தில் தாபிக்க இருந்த நிறுவனத்துக்கு ஒரு பதினான்கு அம்சத் திட்டம் போட்டார். இத்திட்டத்துக்கு முன்னுரையாக பின்வருமாறு கூறியுள்ளார். "கிறிஸ்து சமயிகள் பெரும்பாலும் தங்கள் சமயநூலைத் தாங்கள் கற்றும் வெகு திரவியங்களிச் செலவிட்டுப் பாடசாலைகளைத் தாபித்துப் பிறருக்குக் கற்பித்தும், தங்கள் ஆலயங்களிலும் பிற இடங்களிலும் யாவருக்கும் போதித்தும் வருகிறபடியினாலே அவர்கள் சமயம் எத்தேசங்களிலும் வளர்ந்தோங்கி வருகிறது". நாவலரவர்கள் மேற்காட்டப் பெற்றவற்றைக் கூறியதற்குக் காரணம் சைவர்களும் கிறிஸ்தவர்களின் முன் மாதிரியைப் பின்பற்றித் தமது சமயத்தை வளர்க்க வேண்டுமென்பதே.



'தமிழகத்தை ஈழநாட்டுக்கு கடமைப்படுத்திய பேருபகாரி நாவலர்'



- சோமசுந்தர பாரதியார்



நன்றி: இந்து ஒளி - Quarterly of All Ceylon Hindu Congress

நல்லூரும் நாவலரும்

நல்லூரும் நாவலரும்





 கலாநிதி க குணராசா -





நல்லைநகர்க் கந்தவேளுக்கும் நல்லை ஆறுமுகநாவலருக்கும் இடையில் நெருங்கிய பிணைப்புள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை சிவாகமங்களுக்கும் குமாரதந்திரங்களுக்கும் இணங்க மாற்றியமைக்க வேண்டுமென அவர் விரும்பினார். 'இந் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குத் தூபி இல்லையே? தூபியில்லாதது கோயிலாகாதே! இக்கோயில் ஒரு சிறிதேனும் விதிப்படி கட்டப்பட்டிருக்கவில்லை' என அவர் கூறினார்.



இது மடாலயம் ஆதலாலும் சமாதிக் கோயில் ஆதலாலும் விதிமுறைகளுக்கு இணங்க அமைய வேண்டுமென்ற நியதியில்லை என்பர். ஆதலால், வருடாவருடம் கோயிலினுள் மாற்றங்கள் உருவாகின்றன. வழமையான உள்வீதி, திருக்குளத்தை உள்ளடக்கி இன்று அமைந்துள்ளது. வடபாக உட்புறச் சுவரில் திருமுருக்னின் அறுபடை வடிவங்களைக்கீறி, முருகனின் காலில் "ஆமப்பூட்டு" ஒன்றும் மாட்டியிருக்கிறார்கள். நடராசரின் சித்திர வடிவம் கிழக்கு நோக்கி இருக்க, முருகனின் திருக்கலியாணக் கோலம் தெற்கு நோக்கி வரையப்பட்டிருக்கிறது. சூரிய நாராயணின் வடிவம் கிழக்கு நோக்கி வரையப்பட்டுள்ளது. உட்பிரகார மண்டபங்களும் முன்புற புதுத் தோற்றமும் அவற்றிலுள்ள தோரண வளைவுகளும் இந்துக் கோயிலுக்குரிய தாகவில்லை. மடாலயம் ஆதலால், ஆகம விதிகள் இங்கு பூரணமாகப் பேணப்படாது போயின.



'கி.பி. 1873இல் கந்தையா மாப்பணார் அதிகாரியாக இருந்த காலத்தில், ஆறுமுகநாவலர் அவர்கள் அக்கோயிற்றிருப்பணியைக் கருங்கல்லாற் கட்டும் விருப்பினராய், அ?தோடு கோயிலாதீனம் ஊரவர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சபையால் நடத்தப்பட வேண்டுமென்னும் நோக்கமுடையவராய், அவ்வருடம் தை மாசத்தில் அக்கோயிலில் மகாசபை ஒன்று கூட்டிப் பிரசங்கஞ் செய்து ரூபா 6,000 வரையில் கையொப்பமுஞ் சேர்த்தார். ரூபா 3,000 வரையிற் செலவு செய்து கருங்கற்களும் எடுப்பிக்கப்பட்டன. ஆனால் தேர்த்திருவிழவுக்கு முதனாள் செய்து வருகிற ஆட்டுக் கொலையை இனிமேல் அவ்வாறு செய்வதில்லையென்று நாவலருக்கு முன் செய்து கொடுத்த பிரதிக்கினைக்கு மாறாகப் பின்னும் அக்கொலை நடந்தபடியால், நாவலர் அவர்கள் கோபித்து, 1876ம் வருஷம் மார்கழி மாசம் வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலில் ஒரு மகாசபை கூட்டி, நல்லூர்க் கந்தசுவாமி கோயிலதிகாரியை விலக்குவதற்கு ஒரு வழக்குத் தொடரவும், பின் அக்கோயிலை ஒழுங்காய் நடத்துவற்குமாக, ஒரு சபை அக்கூட்டத்தில் நியமிக்கப்பட்டது. நியமிக்கப்பட்ட சபையார் கோயிலதிகாரி மேல் வழக்குத் தொடர்ந்தனர். அது விளக்கத்திற்கு வருமுன் நாவலரவர்கள் தேகவியோகிகமாயினர். 10-06-1929-ல் இக்கோயில் பொதுவென்றும், கோயிலதிகாரி கோர்ட்டுக்குக் கணக்குக் காட்டவேண்டுமென்றுந் தீர்ந்த டிஸ்திரிக் கோர்ட்டுத் தீர்மானம் நாவலர் அவர்கள் தொடங்கிய வழக்கின் பெறுபேறேயாகும்.



'இக்கோயிலுக்குப் பெயர் யாது? கந்தசுவாமி கோயில். இங்கிருக்கிற மூர்த்தி கந்தசுவாமியா? இல்லை, வேலாயுதம். கந்தசுவாமிக்கு வடிவம் வேலாயுதமா? அது அவர் கைப்படிக்கலம். அவரேவல் செய்யும் அடிமை' என நாவலர் கூறினார். தீட்சை பெறாத பிராமணர் பூசை செய்ததும், தேவதாசிகள் நடனமாடுவதும், தேர்த்திருவிழாவின் போது தேர்க்காலில் ஆடு வெட்டிப் பலி கொடுப்பதும் ஆகம விதிகளுக்கு முரணானவை' என அவர் கருதினார். அதனால், அக்காலத்தில் கோயிலதிகாரியாக இருந்த கந்தையா மாப்பணாருடன் பெரும் சச்சரவுப்பட்டுப் பிரிந்தார். ஒரு கட்டத்தில் 'இருபத்தைந்து வருஷகாலம்' நல்லூர்க் கோயிலுக்குப் போகாதிருந்துள்ளார்; கர்ப்பக் கிருகத்தைக் கருங்கற்றூலியாகச் செய்விக்க அவர் விரும்பி, கருங்கற்களும் தருவிக்கப்பட்டன. ஆனால், கோயிலதிகாரிகள் ஒத்துழைக்காததால், அவை வீதியில் வீணே கிடந்து, இன்று வெளி மதிலுக்கு அத்திவாரமாகிவிட்டன.



நாவலருக்கும் மாப்பாணர்களுக்கும் விரோதம் இருந்துள்ளதை நாவலரின் 'நல்லூர்க் கந்தசுவாமி கோயில்' என்ற கட்டுரையிலிருந்து அறிய முடிகிறது.



'எப்படியாயினும் ஆகட்டும். இங்கே அருள் விளக்கம் இருக்கிறது' என்பதை நாவலரும் ஏற்றுக் கொண்டார்.



மூலம்: நல்லை நகர் நூல்



எழுதியவர்: கலாநிதி கந்தையா குணராசா (செங்கை ஆழியான்)



வெளியீடு: பூபாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு



இரண்டாம் பதிப்பு: ஜனவரி 2001

யாழ்ப்பாணத்து நல்லூர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்கள்

யாழ்ப்பாணத்து நல்லூர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்கள்







"தமிழ் சைவம் இரண்டும் என் இரு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன் கொள்வதே என் கடன்; அவை வாழப் பணி புரிவதே என் வாழ்வின் குறிக்கோள்", என வாழ்ந்தவர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்கள்.



அவர் ஸ்ரீலங்கா யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தருக்கும், சிவகாமிக்கும் 1822 டிசம்பர் 12ல் (சித்திரபானு மார்கழி 5) தோன்றியவர்.



அவர் தமிழ் இலக்கிய இலக்கணச் சித்தர்; சாத்திரங்கள், சிவாகமங்கள் கற்றவர்; ஆங்கிலத்திலும் ஸமஸ்கிருதத்திலும் வல்லவர்; சிவனடியை மறவாத சிந்தனையாளர்; உரைநடை கைவந்த வல்லாளர்; நல்லாசிரியர்; நூலாசிரியர்; உரையாசிரியர்; பதிப்பாசிரியர்; சொல்லின் செல்வர்; தனக்கென வாழாத் தகைமையாளர்; தவக்கோலச்சீலர்; இல்லறம் ஏற்காது நற்பணி செய்தவர்.



அவர் இயற்றிய நூல்கள்: 23; உரை செய்தவை: 8; பரிசோதித்துப் பதிப்பித்தவை: 39; யாத்த பாடல்கள்: 14.



விவிலிய நூலுக்குச் சிறந்த மொழிப்பெயர்ப்பு செய்தது, திருக்குறள் பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தது, பெரிய புராண வசனம் எழுதியது அவருடைய பெருமைக்குச் சான்றுபகர்வன. அவர் இயற்றிய சைவ வினா விடை, பாலபாடம் இன்றும் போற்றப் படுபவையாகும்.



யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்தில் மேலவீதியில், சைவப்பிரகாச வித்தியாசாலை (1864) (தற்போது மேல்நிலைப்பள்ளி) சென்னையில் வித்தியானுபாலன அச்சியந்திர சாலை (1860) ஆகியவற்றை நிறுவியவர். சிதம்பரம் ஞானப்பிரகாசர் திருக்குளம் வடகரையில், அவருடைய விருப்பப்படி, சேக்கிழார் கோயில் நிறுவப்பட்டது (1890).



திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் 'நாவலர்' பட்டம் பெற்றவர் (1865).



அவருடைய சமகாலச் சான்றோர்களில் சிலர் யாழ்ப்பாணத்தில் சங்கரபண்டிதர், சிவசம்புப் புலவர், ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை, விஸ்வநாதப் பிள்ளை, பர்சிவல்துரை; தமிழ்நாட்டில், சிதம்பரம் வடலூர் இராமலிங்க அடிகளார், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மகாலிங்க அய்யர், இராமநாதபுரம் பொன்னுசாமிதேவர், அவருடைய மாணக்கர்களில் சிலர்: சதாசிவம் பிள்ளை (முதல் மாணாக்கர்), பொன்னம்பலம்பிள்ளை, செந்தில்நாத அய்யர், கைலாசப்பிள்ளை.



1879 டிசம்பர் 5ல் (பிரமாதி கார்த்திகை 21 மகம்) சிவப்பேறு பெற்றார்.



"தமிழ்க்குலம் உலகப்புகழ் எய்தத் தாழாதுஞற்றுங்கள் அ?தொன்றே எனக்குத் தமிழர் செய்யும் கைம்மாறு". - ஆறுமுக நாவலர்.

நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்

ஓம் சிவமயம்




நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்



Nallur SrilaSri Arumuga Navalar




(1822 - 1879)







"பாவலர் போற்றும் ஞான தேசிகரை



பணிந்தவராணையின் வண்ணம்



பூவலர் கொன்றை புனைந்தவர் புகழைப்



புலமிகு மறிவர் கூட்டுண்ணக்



காவலர் வியப்ப உரைத்திடல் கேட்டுக்



கருணைகூர் தேசிகர் இவர்க்கு



நாவலரெனும் பேர் தகுமென அளித்தார்



ஞாலத்தார் தகுந்தகும் என்ன?"



- ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரைப் பற்றி



சுவாமி விபுலாநந்தர் சூட்டிய கவிதா பாமாலை

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

அரை நூற்றாண்டு காலமாக அரசியலில் ஆளுமை செலுத்திய பொன். இராமநாதன்

அரை நூற்றாண்டு காலமாக அரசியலில் ஆளுமை செலுத்திய பொன். இராமநாதன்



பொன்.இராமநாதன் ஒரு சிறந்த வழக்கறிஞர். அரசியல் அறிஞர். சட்டசபை உறுப்பினர். திறமையான பேச்சாளர். 1879 இல் தனது 28 ஆவது அகவையில் நல்லை நகர் ஆறுமுக நாவலரின் ஆதரவோடு சட்டவாக்க சபையில் காலடி எடுத்து வைத்ததோடு அவரது அரசியல் வரலாறு தொடங்கியது. எழுபதாவது அகவையில் 1921 ஆம் ஆண்டில் சேர் பட்டம் பெற்றவர்


இராமநாதன் 1911 இல் அகில இலங்கை அடிப்படையில் படித்தோர் தொகுதிக்குப் போட்டியிட்டு சிங்களத் தலைவர்களில் ஒருவரான சேர் மார்க்கஸ் பெர்னாந்துவைத் தோற்கடித்தார். கண்டி உயர்சாதிப் பவுத்த சிங்களவர்கள் கிறித்து சமயத்தவரும் கரவா சாதியைச் சேர்ந்தவருமான பெர்னாந்துக்கு எதிராக வாக்களித்தார்கள்.

1916 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் ரி.எஸ். ஜெயவர்த்தனா என்ற சிங்களவரோடு போட்டியிட்டு இராமநாதன் வெற்றி பெற்றார். இத் தேர்தலிலும் படித்த கண்டிச் சிங்களவர்களில் பெரும்பான்மையோர் இராமநாதனையே ஆதரித்தனர்.

சட்டவாக்கு அவையில் உத்தியோகப்பற்றற்ற நியமன உறுப்பினராக 1922 – 1924 வரை பணியாற்றியவர்.

1924 ஆம் ஆண்டு ஆட்புல அடிப்படையில் தேர்தல் நடந்தபோது யாழ்ப்பாணக் குடாநாட்டு வலிகாமம் வடக்குத் தொகுதியில் இராமநாதன் போட்டியிட்டு வென்றார். இந்தப் பதவியில் அவர் இறக்கும் வரையில் (நொவெம்பர் 26, 1930) தொடர்ந்து இருந்தார். அவர் இறக்கும் போது அவருக்கு அகவை எண்பது ஆகும்.

அதாவது 1879 தொடங்கி 1930 வரை ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் இராமநாதனின் ஆளுமைக்குட்பட்ட அரசியல் இலங்கையில் கோலோச்சியது என்றால் அது மிகையல்ல.

பொன். இராமநாதன் ஆண், பெண் இருபாலாருக்கும் தாய்மொழியில் கட்டாய கல்வி வழங்கப்பட வேண்டும் என வாதாடியவர். அதே போல் கட்டாய சமயக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்றும் வாதாடியவர்.


நான் முன்னர் குறிப்பிட்டது போல இராமநாதன் யாழ்ப்பாணக் குடாநாட்டு சைவசமய மக்களின் கல்வி வளர்ச்சிக்கு இமாலய சாதனையாக இரண்டு கல்லூரிகளைக் கட்டியவர்.

யாழ்ப்பாணத்தில் மகளிர் படிப்பதற்கு 1913 ஆம் ஆண்டு சுன்னாகத்தில் இராமநாதன் கல்லூரியையும் எட்டு ஆண்டுகள் கழித்து இளைஞர் படிப்பதற்கு யாழ்ப்பாணத்தில் பரமேஸ்வரா கல்லூரியையும் நிறுவியவர்.

சிங்கள மக்கள் தமது இனவுணர்வு. மொழியுணர்வு அற்ற நிலையில் தம் தனித்துவத்தை இழக்கும் ஆபத்திற்குள்ளாகி இருந்த போது “lf Sinhala lips will not speak the Sinhala Language who else there to speak it” (சிங்களவர்கள் சிங்களத்தைப் போசாதுவிடின் வேறு யார் சிங்களத்தை பேசவர்;) என்று 1904 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் ஆனந்தா கல்லூரியில் இராமநாதன் பேசிய பேச்சுத்தான் சிங்களவர்களை இனவுணர்வும். மொழியுணர்வும் கொள்ளச் செய்தது.

1915 சிங்கள ,- முஸ்லிம் கலவரம் நடைபெற்றது. இதன்போது ஆங்கிலேய அரசாங்கம் இதனை கடுமையாக நசுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. படைத்துறைச் சட்டத்தை (Martial Law) பிற்காலத்தில் பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா, எவ்.ஆர். சேனநாயக்கா, பாரன் ஜெயதிலக்கா உட்பட பல சிங்கள அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். .இராமநாதன் சிங்களத் தலைவர்களுக்கு எதிரான இந்த அடக்குமுறையைக் கடுமையாக கண்டித்தார். எதுவித நிபந்தனையுமில்லாமல் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என அரசை வற்புறுத்தினார். அரசு அதற்கு இணங்காதபோது முதலாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போர்ச் சு10ழ்நிலையிலும் இங்கிலாந்துக்குச் சென்று பிரதமருடனும் மற்ற அமைச்சர்களுடனும் பேசிக் கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். ஆளுநர் பிறப்பித்த படைத்துறைச் சட்டம் (Martial Law) திரும்பப் பெறப்பட்டது. அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட தேசாதிபதியையும் திருப்பி அழைக்க வைத்தார்.

வெற்றியோடு இராமநாதன் இலங்கை திரும்பினார். அவரை வரவேற்பதற்கு சிங்களத் தலைவர்களும் சிங்கள மக்களும் கொழும்புத் துறைமுகத்தில் கால் கடுக்கக் காத்திருந்தனர். இராமநாதனை அழைத்துப் போக குதிரைகள் பூட்டிய தேர் காத்திருந்தது. ஆனால் உணர்ச்சி வசப்பட்ட சிங்களவர்கள் குதிரைகளை அவிழ்த்துவிட்டு இராமநாதனைத் தேரில் வைத்து தாமே குதிரைகளாக மாறி காலி வீதி வழியாக கொள்ளுப்பிட்டியில் இருந்த அவரது சுகஸ்தான் மாளிகை வரை இழுத்து வந்தனர்.

"எமது நெருக்கடியான கால கட்டத்தில் வடக்கிலிருந்து வந்த இவ்வீர மகன் எமக்குத் துணை போகாது விட்டிருந்தால் சிங்கள இனமே பூண்டோடு அழிந்திருக்கும்" என்று சிங்களத் தலைவர்கள் பாமாலை பாடி புகழ்மாலை பாடினார்கள்.

இந்தக் காட்சி ஓவியமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் மண்டப மேடையில் இப்போதும் தொங்கவிடப்பட்டுள்ளது. ஆனால் கொழும்பு அருங்காட்சியம் உள்ளிட்ட பல அரச திணைக்களங்களில் காணப்பட்ட போதிலும் தீடீரென மாயமாக மறைந்து விட்டன.


சிங்களவர் – முஸ்லிம் கலவரம் தொடர்பாக "1915 இனக்கலவரமும் படைத்துறைச் சட்டமும்" என்ற நூலையும் எழுதினார்.

1915 இல் தூக்குக் கயிற்றில் இருந்து சிங்களத் தலைவர்களைக் காப்பாற்றிய இராமநாதனைப் பாராட்டு முகமாக அவருக்கு ஒரு சிலை எழுப்ப முடிவு செய்யப்பட்டது. இச்சிலை செதுக்கப்பட்ட போதும் அது எழுப்பப்படவில்லை. அது ஒரு பண்டகசாலையில் தேடுவாரற்றுக் கிடந்தது.

பவுத்த ஆலயங்களின் சொத்துரிமைச் சட்டம் நிறைவேற்றப்படல், வெசாக் விடுமுறை நாள் சட்டம் நிறைவேற்றப்படல் என்பனவற்றிற்கும் காரணமாக இருந்தார்.

இதே இராமநாதன் 1919 இல் தன் தம்பி சேர். பொன். அருணாசலம் தேசிய காங்கிரசின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட நிலையில் தன்னிடம் வாழ்த்துப்பெற வந்தபோது “தம்பி முன்னேறு. ஆனால் உன் நாற்காலியிலிருந்து நீ தூக்கி எறியப்படும் ஆபத்து உண்டு” என்று எச்சரித்தார். அந்த எச்சரிக்கை வீண்போகவில்லை.

இவ்வளவு புகழுக்கும் பெருமைக்கும் உரிய ஒரு அரசியல்வாதி படியாதவர்களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை கொடுப்பதைக் கடைசிவரை கடுமையாக எதிர்த்தது வியப்பை அளிக்கிறது. அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை அளித்தால் பெரும்பான்மை சிங்களவர்களது கைகளுக்கு ஆட்சி அதிகாரம் போய்விடும் என்ற அச்சம் காரணமாக அதனை எதிர்த்தார் என்பதற்கு "டொனமூர் எனின் இனிமேல் தமிழர் இல்லை. நாங்கள் அதிகாரத்தை ஒரு பண்பில்லாத கும்பலிடம் கையளிகப் போகிறோம். போதிய பாதுகாப்பின்றி நாம் இந்த அரசியல் யாப்பை ஏற்போமானால் தமிழர்களுக்கு அது ஒரு சாவுமணியோசையாக இருக்கும்" என்ற வாக்கியத்தை விட வேறு வலுவான சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

இராமநாதன் இவ்வாறு எச்சரித்ததை "கிழவனின் பிதற்றல்" என சிங்களவத் தலைவர்கள் எள்ளி நகையாடினர். தமிழ்த் தலைவர்கள் பலர் இவரின் எச்சரிக்கையை ஏற்க மறுத்தனர். இதனால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் "முத்தி நெறி அறியாத மூர்கரோடு முயல்வேனை" என்ற திருவாசகப் பாடலை மேற்கோள் காட்டிப் பேசினார்.

1919 ஆண்டுக்குப் பின்னர் அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக இராமநாதன் தெரிவித்த கருத்துக்கள் தமிழர்களுக்குச் சார்பாக அமைந்திருந்தன என்று கருதப்பட்டது. குறிப்பாக வகுப்புவாத பிரதிநித்துவ அடிப்படையை நீக்கி ஆட்புல அடிப்படையில் தேர்தல் நடைபெறும் போது சிறுபான்மையினரைக் - குறிப்பாகத் தமிழரை அது பாதிக்கும் - என்று இராமநாதன் வாதிட்டது சிங்கள – பவுத்த தலைவர்களது கோபத்துக்கும் வெறுப்புக்கும் அவரை உள்ளாக்கியது. இந்த நிலையில் அவரின் சிலையைக் கடலில் தூக்கியயெறியத் சில சிங்களத் தலைவர்கள் சதி செய்தனர்.

இலங்கையின் முதலாவது பிரதமர் என்ற புகழைத் தட்டிக்கொண்ட டி.எஸ். சேனநாயக்கா இராமநாதனின் இறுதிக்காலத்தில் அவரோடு பல விடயங்களில் மாறுபட்டிருந்தார். எனினும் அவர் மறைந்த போது எல்லாக் காலங்களிலும் தலைசிறந்த இலங்கையர் (The Greatest Ceylonese of all time) என்று கூறினார். பெரும்பாலும் இது வஞ்சகப் புகழ்ச்சியாகவே இருந்திருக்க வேண்டும்.

தமிழ்த் தலைவர்களை நம்பவைத்து கழுத்து அறுத்ததில் அதிலும் நோவாமல் அறுத்ததில் பத்தாம் வகுப்பு மட்டும் படித்த டி.எஸ். சேனநாயக்காவை யாரும் விஞ்சமுடியாது.

தனது அமைச்சரவையில் அருணாசலம் மகாதேவா, பேராசிரியர் சுந்தரலிங்கம், ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோரை வைத்துக்கொண்டுதான் கிழக்கில் பட்டிப்பளை (கல் ஓயா) அல்லை – கந்தளாய் சிங்களக் குடியேற்றங்களை மும்மரமாகச் செய்து முடித்தார். அதற்கு அப்போது சொல்லப்பட்ட காரணம் தெற்கில் நெருக்கமாக வாழும் சிங்களவர்களுக்குப் புதிய நீர்ப்பாசன திட்டங்களில் காணிகள் கொடுத்து குடியமர்த்தப் படுகிறார்கள் என்பதே.

இராமநாதன் இறந்த மறுநாள் இலங்கை Daily News செய்தித்தாளில் வெளிவந்த ஆசிரிய தலையங்கம் "இராமநாதன் இலங்கையின் மிகவும் ஆளுமைபடைத்த தலைவர்" என வருணித்தது. இலண்டனில் இருந்து வெளியாகும் Times of London செய்தித்தாள் இராமநாதனை "நவீன இலங்கையின் நிறுவனர்" (Founder of modern Ceylon) என எழுதியது.


இலங்கையின் வரலாற்றில் இராமநாதனைப் போல் பல தமிழ் அரசியல்வாதிகளைச் சிங்களவர்கள் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தி விட்டு பின்னர் தூக்கி எறிந்த வரலாறு நிறைய உண்டு. பேராசிரியர் சி. சுந்தரலிங்கம், வி. நல்லையா, சு.நடேசன், ஜி.ஜி. பொன்னம்பலம், கந்தையா வைத்தியநாதன், செல்லையா குமாரசூரியர், இலட்சுமன் கதிர்காமர் போன்றோர் இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவர்கள். பட்டம், பதவிகளுக்குப் பலியான சுந்தரலிங்கம் பிற்காலத்தில் கழிவிரக்கப்பட்டார். மற்றவர்களை அப்படிச் சொல்ல முடியாது.

பேராசிரியர் சுந்தரலிங்கம் டி.எஸ். சேனநாயக்கா, யோன் கொத்தலாவெலா போன்ற சிங்கள அரசியல்வாதிகளுக்கு நீண்டகாலமாக ஆலோசகராக இருந்தவர். டிசெம்பர் 10, 1948 இல் இந்திய குடியானவர்களது குடியுரிமைச் சட்டம் இரண்டாவது வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது பேராசிரியர் சுந்தரலிங்கம் அதற்கு எதிராக வாக்களித்தார். பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா அவரிடம் விளக்கம் கேட்ட போது விளக்கம் கொடுக்க மறுத்த பேராசிரியர் சுந்தரலிங்கம் தனது அமைச்சர் ( ஆinளைவநச ழக வுசயனந யனெ ஊழஅஅநசஉந ) பதவியைத் துறந்தார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு (மே 14, 1976) 17 ஆண்டுகளுக்கு முன்னரே 1959 இல் பேராசிரியர் சுந்தரலிங்கம் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

50:50 கேட்ட ஜி.ஜி. பொன்னம்பலம் செப்தெம்பர் 1948 இல் டி.எஸ். சேனநாயக்காவின் அமைச்சரவையில் தொழில்துறை மற்றும் மீன்பிடி அமைச்சராகச் சேர்ந்து கொண்டார். அதன் மூலம் இலங்கை இந்திய காங்கிரசோடு மலையகத் தமிழர்களது குடியுரிமைக்குப் பாடுபடுவேன் எனப் பொன்னம்பலம் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டார். 1953 ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற சேர் யோன் கொத்தலாவெலா பொன்னம்பலத்தை அமைச்சரiவியல் இருந்து வெளியேற்றி அவமானப்படுத்தினார்.

டி.எஸ். சேனநாயக்கா 1953 காலமான போது அடுத்த பிரதமராக மூப்பு அடிப்படையில் சேர். யோன் கொத்தலாவலா பிரதமராக வந்திருக்க வேண்டும். ஆனால் டட்லி செனநாயக்கா இலங்கையின் இரண்டாவது பிரதமராகப் பதவி ஏற்பதற்கு ஜீ. ஜீ. பொன்னம்பலம் பாடுபட்டார் என்ற கோபம் காரணமாகவே அவர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

செல்லையா குமாரசூரியர் திருமதி பண்டாரநாயக்காவின் அமைச்சரவையில் (1970 – 1977) அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். பின் அவர் தேடுவாரற்றுக் காணாமல் போய்விட்டார்.

சந்திரிகா குமாரதுங்கா அமைச்சரவையில் இலட்சுமன் கதிர்காமர் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டு அழகு பார்க்கப்பட்டார். ஆனால் பிரதமர் பதவி வெற்றிடமாக வந்த போது அவர் தமிழர் என்ற காரணத்துக்காகக் கழட்டிவிடப்பட்டார்.

1915 இல் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இடம் பெற்ற சிங்கள - முஸ்லிம் இனக்கலவரம் இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. இதுபற்றி அடுத்த கிழமை சற்று விரிவாக எழுதுவேன். (வளரும்)