திங்கள், 18 ஜனவரி, 2010

நல்லூரும் நாவலரும்

நல்லூரும் நாவலரும்





 கலாநிதி க குணராசா -





நல்லைநகர்க் கந்தவேளுக்கும் நல்லை ஆறுமுகநாவலருக்கும் இடையில் நெருங்கிய பிணைப்புள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை சிவாகமங்களுக்கும் குமாரதந்திரங்களுக்கும் இணங்க மாற்றியமைக்க வேண்டுமென அவர் விரும்பினார். 'இந் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குத் தூபி இல்லையே? தூபியில்லாதது கோயிலாகாதே! இக்கோயில் ஒரு சிறிதேனும் விதிப்படி கட்டப்பட்டிருக்கவில்லை' என அவர் கூறினார்.



இது மடாலயம் ஆதலாலும் சமாதிக் கோயில் ஆதலாலும் விதிமுறைகளுக்கு இணங்க அமைய வேண்டுமென்ற நியதியில்லை என்பர். ஆதலால், வருடாவருடம் கோயிலினுள் மாற்றங்கள் உருவாகின்றன. வழமையான உள்வீதி, திருக்குளத்தை உள்ளடக்கி இன்று அமைந்துள்ளது. வடபாக உட்புறச் சுவரில் திருமுருக்னின் அறுபடை வடிவங்களைக்கீறி, முருகனின் காலில் "ஆமப்பூட்டு" ஒன்றும் மாட்டியிருக்கிறார்கள். நடராசரின் சித்திர வடிவம் கிழக்கு நோக்கி இருக்க, முருகனின் திருக்கலியாணக் கோலம் தெற்கு நோக்கி வரையப்பட்டிருக்கிறது. சூரிய நாராயணின் வடிவம் கிழக்கு நோக்கி வரையப்பட்டுள்ளது. உட்பிரகார மண்டபங்களும் முன்புற புதுத் தோற்றமும் அவற்றிலுள்ள தோரண வளைவுகளும் இந்துக் கோயிலுக்குரிய தாகவில்லை. மடாலயம் ஆதலால், ஆகம விதிகள் இங்கு பூரணமாகப் பேணப்படாது போயின.



'கி.பி. 1873இல் கந்தையா மாப்பணார் அதிகாரியாக இருந்த காலத்தில், ஆறுமுகநாவலர் அவர்கள் அக்கோயிற்றிருப்பணியைக் கருங்கல்லாற் கட்டும் விருப்பினராய், அ?தோடு கோயிலாதீனம் ஊரவர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சபையால் நடத்தப்பட வேண்டுமென்னும் நோக்கமுடையவராய், அவ்வருடம் தை மாசத்தில் அக்கோயிலில் மகாசபை ஒன்று கூட்டிப் பிரசங்கஞ் செய்து ரூபா 6,000 வரையில் கையொப்பமுஞ் சேர்த்தார். ரூபா 3,000 வரையிற் செலவு செய்து கருங்கற்களும் எடுப்பிக்கப்பட்டன. ஆனால் தேர்த்திருவிழவுக்கு முதனாள் செய்து வருகிற ஆட்டுக் கொலையை இனிமேல் அவ்வாறு செய்வதில்லையென்று நாவலருக்கு முன் செய்து கொடுத்த பிரதிக்கினைக்கு மாறாகப் பின்னும் அக்கொலை நடந்தபடியால், நாவலர் அவர்கள் கோபித்து, 1876ம் வருஷம் மார்கழி மாசம் வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலில் ஒரு மகாசபை கூட்டி, நல்லூர்க் கந்தசுவாமி கோயிலதிகாரியை விலக்குவதற்கு ஒரு வழக்குத் தொடரவும், பின் அக்கோயிலை ஒழுங்காய் நடத்துவற்குமாக, ஒரு சபை அக்கூட்டத்தில் நியமிக்கப்பட்டது. நியமிக்கப்பட்ட சபையார் கோயிலதிகாரி மேல் வழக்குத் தொடர்ந்தனர். அது விளக்கத்திற்கு வருமுன் நாவலரவர்கள் தேகவியோகிகமாயினர். 10-06-1929-ல் இக்கோயில் பொதுவென்றும், கோயிலதிகாரி கோர்ட்டுக்குக் கணக்குக் காட்டவேண்டுமென்றுந் தீர்ந்த டிஸ்திரிக் கோர்ட்டுத் தீர்மானம் நாவலர் அவர்கள் தொடங்கிய வழக்கின் பெறுபேறேயாகும்.



'இக்கோயிலுக்குப் பெயர் யாது? கந்தசுவாமி கோயில். இங்கிருக்கிற மூர்த்தி கந்தசுவாமியா? இல்லை, வேலாயுதம். கந்தசுவாமிக்கு வடிவம் வேலாயுதமா? அது அவர் கைப்படிக்கலம். அவரேவல் செய்யும் அடிமை' என நாவலர் கூறினார். தீட்சை பெறாத பிராமணர் பூசை செய்ததும், தேவதாசிகள் நடனமாடுவதும், தேர்த்திருவிழாவின் போது தேர்க்காலில் ஆடு வெட்டிப் பலி கொடுப்பதும் ஆகம விதிகளுக்கு முரணானவை' என அவர் கருதினார். அதனால், அக்காலத்தில் கோயிலதிகாரியாக இருந்த கந்தையா மாப்பணாருடன் பெரும் சச்சரவுப்பட்டுப் பிரிந்தார். ஒரு கட்டத்தில் 'இருபத்தைந்து வருஷகாலம்' நல்லூர்க் கோயிலுக்குப் போகாதிருந்துள்ளார்; கர்ப்பக் கிருகத்தைக் கருங்கற்றூலியாகச் செய்விக்க அவர் விரும்பி, கருங்கற்களும் தருவிக்கப்பட்டன. ஆனால், கோயிலதிகாரிகள் ஒத்துழைக்காததால், அவை வீதியில் வீணே கிடந்து, இன்று வெளி மதிலுக்கு அத்திவாரமாகிவிட்டன.



நாவலருக்கும் மாப்பாணர்களுக்கும் விரோதம் இருந்துள்ளதை நாவலரின் 'நல்லூர்க் கந்தசுவாமி கோயில்' என்ற கட்டுரையிலிருந்து அறிய முடிகிறது.



'எப்படியாயினும் ஆகட்டும். இங்கே அருள் விளக்கம் இருக்கிறது' என்பதை நாவலரும் ஏற்றுக் கொண்டார்.



மூலம்: நல்லை நகர் நூல்



எழுதியவர்: கலாநிதி கந்தையா குணராசா (செங்கை ஆழியான்)



வெளியீடு: பூபாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு



இரண்டாம் பதிப்பு: ஜனவரி 2001

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக