திங்கள், 18 ஜனவரி, 2010

நாவலரின் வாழ்வில்

நாவலரின் வாழ்வில்




முகவை பொன்னுச்சாமித் தேவர் (1837-1870)




திருக்குறள் பரிமேலழகருரை, திருக்கோவையாருரை, சேதுபுராணம் முதலிய இலக்கியங்களும், இலக்கணக் கொத்து, இலக்கண விளக்க சூறாவளி, தருக்க சங்கிரகம் முதலிய இலக்கண தருக்க நூல்களும் ஆறுமுக நாவலரின் ஆய்விலும், பார்வையிலும் அச்சிடப்படிவதற்குரிய ஏற்பாடு செய்தவர் முகவை பொன்னுச்சாமித் தேவர். இந்நூல்கள் ஆறுமுக நாவலரால் பதிக்கப் பெற்று வெளி வந்தபோது, அவற்றைப் பெற விரும்பி, தமிழக முழுவதுமிருந்து புலவர்களும், பயிலும் மாணவர்களும் பாடல்கள் மூலம் பொன்னுச்சாமித் தேவரை வேண்டி எழுதி விண்ணப்பித்தனர். அனைவருக்கும் அஞ்சல்செலவு உட்பட இலவசமாக அனைத்து நூல்களையும் அனுப்பி வைத்தார் தேவர். வேண்டி விண்ணப்பித்த பாடல்கள் யாவும் தொகுக்கப் பெற்று 'பல கவித்திரட்டு' என்ற தலப்பில் உருவாக்கம் செய்து வெளியிடப் பெற்றன.



நாவலர் பெருமானின் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நாள்தோறும் பொன்னுச்சாமித் தேவர் பதிப்பிக்க உள்ள நூல்களை ஒருமுறை பார்த்து, சில திருத்தங்களைச் சொல்வதை வழக்கமாக் கொண்டிருந்தாராம் தேவர். இத்தகைய குறிக்கீட்டை விரும்பாத ஆறுமுக நாவலர் வருந்துவதறிந்த தேவர், சில நாள்கள் நாவலர் பக்கமே செல்வதில்லையாம். தேவர் வருகை தராத காரணத்தைப் புரிந்து கொண்ட நாவலர், தேவரிடம் சென்று "தமிழ் வருகை தராததால் பதிப்புப் பணி வளரவில்லை!" என்றாராம். அதன் பின்னர், நாவலரை நாள்தோறும் சந்திப்பதை நாள்வழிப் பணியாக்கிக் கொண்டாராம் முகவை பொன்னுச்சாமித் தேவர்.



அறிஞர் சொக்கலிங்க ஐயா (1856-1931)



உடுமலைப் பேட்டையில் தந்தையார் தொடங்கிய வணிக நிறுவனத்தில் சிறிது காலம் இளமையில் உதவியாயிருந்த சொக்கலிங்கம், பதினேழு வயதில் யாழ்ப்பணம் வந்தார். யாழ்ப்பாணத்திலும் அவர்களுடைய வணிக நிறுவனம் ஒன்று இருந்தது. யாழ்ப்பாணம் சென்றிருந்த போது ஆறுமுக நாவலரைக் கண்டு தரிசித்துத் தமிழை முறையாகக் கற்கும் தமது வேட்கையைப் பணிவாக நாவலர் பெருமானிடம் தெரிவித்தார் சொக்கலிங்கம்.



நாவலர் பெருமான், "நகரத்தார்களுக்குத் தமிழும், சைவமும் மூச்சும், ரத்தமும் போன்றவை. உணர்வில் ஊறிக்கிடக்கும் அவற்றை உம்மிடம் வளர்க்கச் செய்யும் பணியை, உவந்து ஏற்றுக் கொள்கிறேன்" என்றார் மகிழ்ந்து. யாழ்ப்பாணத்தில் நாவலர் பெருமானிடம், இலக்கிய, இலக்கணத் தமிழ் கற்று, தேவ கோட்டை வன்றொண்டரிடம் திருமுறைகளின் திருநெறித் தமிழ் பயின்று, மதுரை மெய்யப்ப சுவாமிகளிடம் சாத்திரத் தமிழ் படித்து, தமிழின் தகவுணர்ந்தோரானார் சொக்கலிங்கம்.



முத்தமிழின் வித்தகச் சிறப்பை, தத்துவ அமைப்பை, உணர்த்தியும், உணரவும் வைத்த உத்தம அருளாளர் மூவரையும், தமது சித்தத்துள் தெய்வம் அருளிய தேவாசிரியர்களாகக் கொண்டு, அப்பெருமக்களை வணங்கியும், வாழ்த்தியும் திருநூல்கள் இயற்றிப் பெருமகிழ்வு கொண்டார், சொக்கலிங்கம்.



"ஆறுமுக நாவலர் குரு ஸ்துதி", "வன்றொண்டர் குருஸ்துதி", "மெய்யப்ப சுவாமிகள் பதிற்றுப் பத்தாந்தாதி" என்னும் குரு வழிபாட்டு நூல்கள் வெளிவந்தபோது அவற்றின் நுட்பத்திறமும், திட்பத் தரமும் அறிந்த மக்கள், 'சொக்கலிங்கம்' என அழைப்பதை விடுத்து, பணிவோடும் பக்தியோடும், 'ஐயா' என அழைக்கத் தொடங்கினார்கள்.



மூலம்: குன்றக்குடி பெரியபெருமாள்



இராமசாமிப்பிள்ளை



இராமலிங்க அடிகளாரின் திருப்பாடல்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் முதல் நான்கு திருமுறைகளை 1867இல் தொழுவூர் வேலாயுத முதலியார் வெளிக்கொணர்ந்தார். 1869இல் அருட்பா மறுப்பு, "போலி அருட்பா மறுப்பு" இயக்கம் தொடங்கியது. ஆறுமுக நாவலர் இதற்குத் தலைமை தாங்கினார். எதிர்ப்பும் மறுப்புமாக இயக்கம் வளர்ந்தது; தமிழகமெங்கும் இது பரவியது, அறிஞர்களும் பக்தர்களுமாகப் பலர் இரு கட்சிகளாகப் பிரிந்து நின்று வாதிட்டனர்.



சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த அருட்பா மருட்பா இயக்கத்தில் முனைந்து செயல்பட்டவர்களில் ஒருவர் இராமசாமிப்பிள்ளை எனும் தமிழ்ப் பண்டிதர். இவர் இராமநாதபுரத்தில் பிறந்தவர்; மதுரையில் வாழ்ந்தவர்; பத்திரிகாசிரியராகவும் உரையாசிரியராகவும் விளங்கிய இவர் இராமநாதபுர சமஸ்தான வித்துவானாகவும் இருந்தவர்; பொன்னுசாமித்தேவரின் அன்பிற்குப் பாத்திரமானவர்; மதுரைத் திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்து இளைய சந்நிதானத்திற்குக் கல்வியில் உசாத் துணைவராக இருந்தவர்; ஆறுமுக நாவலரிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்; நாவலர் சிதம்பரத்தில் தங்கியிருந்தபோது அவ்வப்போது அங்குச் சென்று அவருடன் இருந்துவரும் பழக்கம் உடையவர். நாவலரை "அண்ணா" என்று அழைக்கும் அளவிற்கு அவரிடம் உரிமையும் நெருக்கமும் கொண்டிருந்தவர் என்பன இங்குக் குறிப்பிடதக்கனவாகும்.



இராமசாமிப்பிள்ளைக்கும் தொழுவூர் வேலாயுத முதலியாருக்குமிடையே அருட்பா பற்றிய வாதம் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் நடந்தது. அதுபற்றி இவர் ஆறுமுக நாவலருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் பம்மல் விசயரங்கனார் (1830-1895) பற்றிய ஓர் குறிப்பும் உள்ளது. "சோமவாரத்திரவிலே ஸ்ரீ விஜயரங்க முதலியாரவர்களும் மடத்துக்கு வந்தார்கள். திருக்கோயிலின் கண்ணே வேலு முதலியிடத்தே பேசினவைகளை வெளியிட்டேன். சந்தோஷப்பட்டார்கள்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக